தேர்வு எழுத வந்தவரை தாக்கிய மாவட்ட கலெக்டர்: வீடியோ வைரல்
தேர்வு எழுத வந்தவரை தாக்கிய மாவட்ட கலெக்டர்: வீடியோ வைரல்
ADDED : டிச 13, 2024 09:16 PM

பாட்னா: அரசு பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிவானதாக புகார் கொடுக்க வந்த தேர்வர்கள் மீது மாவட்ட கலெக்டர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
பீஹாரில் பி.பி.எஸ்.சி. எனப்படும் பீஹார் அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை இன்று( டிச.,13) நடத்தியது.
தலைநகர் பாட்னாவில் உள்ள கும்ஹார் என்ற தேர்வு மையத்தில் 400-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வந்தனர். அப்போது சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிவானதாக செய்தி பரவியது. இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் சிலர் தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்து போராட்டம் நடத்தினர்.
அங்கு ஆய்வுக்கு வந்த மாவட்டகலெக்டர் சந்திரசேகர சிங்கை முற்றுகையிட்டு கோஷம் போடவே ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் கோஷம் போட்ட தேர்வரை இடது கையால் ஓங்கி அறைந்தார். இதன் வீடியோ, மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து பி.பி.எஸ்.சி., தலைவர் பார்மர் ரவி மனுபாய் , வினாத்தாள் கசிவானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. மாநிலம் முழுதும் 900 மையங்களில் தேர்வு அமைதியாக நடைபெற்றது. வதந்தியை பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.