கோலாரில் 257 கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை பொறுப்புடன் செயல்பட மாவட்ட கலெக்டர் உத்தரவு
கோலாரில் 257 கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை பொறுப்புடன் செயல்பட மாவட்ட கலெக்டர் உத்தரவு
ADDED : பிப் 18, 2025 05:49 AM
கோலார்: ''கோலார் மாவட்டத்தில் குடிநீர், கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்படாதவாறு பொறுப்பாக கவனிக்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு கோலார் மாவட்ட கலெக்டர் ரவி உத்தரவிட்டார்.
கோலார் மாவட்ட நிர்வாக அலுவலக அரங்கில் நேற்று அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
கோடைகாலம் ஆரம்பமாகி உள்ளது. கோலார் மாவட்டத்தில் 257 கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பாதிப்பு ஏற்படும் முன்பே கவனம் செலுத்தி அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
பழுது
கோலார் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, டவுன் சபை பகுதிகளில் 1,582 ஆழ்துளைக்கிணறுகள் உள்ளன. 1,333 ஆழ்துளைக்கிணறுகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 249 ஆழ்துளைக்கிணறுகள் பழுதடைந்துள்ளன.
கிராம பகுதிகளில் 1,522 கிராமங்களில் 4,775 ஆழ்துளைக்கிணறுகள் உள்ளன. இதில் 3,425 ஆழ்துளைக்கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் 1,350 ஆழ்துளைக்கிணறுகளை சரி செய்ய வேண்டியுள்ளது.
தனியார் ஆழ்துளைக்கிணறுகளை ஒப்பந்த அடிப்படையில் பெற்று, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.
ஏற்கனவே 2023- - 24லும் கிராமப்பகுதிகளில் 305, நகரப்பகுதிகளில் 131 என 436 ஆழ்துளைக்கிணறுகள் பழுதடைந்திருந்தன. இவை சீர் செய்யப்பட்டு, தண்ணீர் வழங்கப்பட்டன.
சப்ளை
நகராட்சி பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் டேங்கர்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட வேண்டும்.
எரகோள் அணை நீர், நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், ஆழ்துளைக்கிணற்று நீர், இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் சப்ளை செய்ய வேண்டும். வாய்ப்பு இருந்தால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எரகோள் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.
கோடை வெப்பம் தினமும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அனைவருக்குமே உடல் நலம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோடைக்கால அவசிய தேவைக்கு 4.75 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது.
மாவட்டத்தில் 29 வாரங்களுக்கு கால்நடைகளுக்கு 3,38,640 மெட்ரிக் டன் தீவனம் இருப்பு உள்ளது. விவசாயத்துக்கு பயன்படுத்த 9,675 டன் உரம் கைவசம் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஜில்லா பஞ்சாயத்து தலைமை அதிகாரி பிரவீன் பி. பாகவாடி, உதவி கலெக்டர் எஸ்.எம்.மங்களா மற்றும் தாசில்தார்கள், தாலுகாக்களின் பஞ்சாயத்து தலைமை அதிகாரிகள், நகராட்சி ஆணையர்கள், டவுன் சபை, பட்டண பஞ்சாயத்து தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர்.

