தங்கவயலில் 'டவுன் ஷிப்' அமைக்க திட்டம் அதிகாரிகளுடன் மாவட்ட அமைச்சர் ஆலோசனை
தங்கவயலில் 'டவுன் ஷிப்' அமைக்க திட்டம் அதிகாரிகளுடன் மாவட்ட அமைச்சர் ஆலோசனை
ADDED : டிச 05, 2024 07:21 AM

பெங்களூரு: தங்கவயலில் ஒருங்கிணைந்த நகரங்கள் உருவாக்குவது தொடர்பாக, அதிகாரிகளுடன் கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பைரதி சுரேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள தன் அலுவலகத்தில் இதற்கான ஆலோசனை கூட்டத்தை பைரதி சுரேஷ் நடத்தினார்.
மைசூரு, மங்களூரு, ஹுப்பள்ளி - தார்வாட், பெலகாவி, கலபுரகி, கோலார் தங்கச் சுரங்கப் பகுதி, பல்லாரி, துமகூரில் வசந்த நரசாபுரா ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த நகரங்கள் என்ற 'டவுன் ஷிப்' அமைக்கப்படும் என, நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
இதில், கோலார் மாவட்டம், தங்கவயலில் ஒருங்கிணைந்த 'டவுன் ஷிப்' அமைக்க நகர்ப்புற மேம்பாட்டுத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதை விரைவுபடுத்த அமைச்சர் பைரதி சுரேஷ் ஆர்வம் காட்டினார்.
'டவுன் ஷிப்' அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் 'டவுன் ஷிப்' அமைப்பதற்கு தங்கச்சுரங்கத்தின் 960 ஏக்கர் நிலம், மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்த அவர் உத்தரவிட்டார்.
தங்கவயல் 'டவுன் ஷிப்' அமையவுள்ள இடத்திற்கு அருகில் சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை செல்கிறது. இந்த விரைவு சாலைக்கு, 'டவுன் ஷிப்'பில் இருந்து இணைப்பு ஏற்படுத்துவது குறித்து, கூட்டத்தில் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அத்துடன் 'டவுன் ஷிப்' அமைப்பதற்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலருக்கு அவர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் கர்நாடக நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதிக் கழகத் தலைவரும், பங்காரப்பேட்டை எம்.எல்.ஏ.,வுமான நாராயணசாமி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர் எம். தீபா, நிர்வாக இயக்குனர் பி. சரத், தலைமை பொறியாளர் நந்தீஷ்குமார்பங்கேற்றனர்.