விவாகரத்து ஒப்பந்த மீறல்: முன்னாள் மனைவி புகாரில் நடிகர் மீது வழக்கு
விவாகரத்து ஒப்பந்த மீறல்: முன்னாள் மனைவி புகாரில் நடிகர் மீது வழக்கு
ADDED : பிப் 21, 2025 02:41 AM

திருவனந்தபுரம்:விவாகரத்து ஒப்பந்தத்தை முறைகேடு செய்து மகள் பெயரிலான பணத்தை திரும்ப பெற்றதாக முன்னாள் மனைவி கொடுத்த புகாரின்பேரில் தமிழ், மலையாள நடிகர் பாலா மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், வீரம், தம்பி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள், மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் பாலா. 2010ல் மலையாள பாடகி அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார்.
இத்தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. பின் கருத்து வேறுபாடால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
பிறகு இரண்டாவதாக திருமணம் செய்த எலிசபெத் என்பவரையும் பாலா விவாகரத்து செய்தார். கடந்தாண்டு மூன்றாவதாக மாமா மகளை பாலா திருமணம் செய்தார்.
இந்நிலையில் அமிர்தா சுரேஷ் பாலா மீது கொச்சி போலீசில் கொடுத்த புகாரில் கூறியதாவது:
பாலாவுடனான விவாகரத்து வழக்கில் இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஐந்தாவது பக்கத்தை அவர் போலியாக தயாரித்துள்ளார். மகளின் பெயரில் எடுக்கப்பட்ட இன்சூரன்ஸில் அவர் முறைகேடு செய்துள்ளார். பிரீமியம் தொகையை அவர் கட்டவில்லை.
இன்சூரன்ஸ்க்கான தொகையை திரும்ப எடுத்துக் கொண்டார். வங்கியில் மகளின் பெயரில் டெபாசிட் செய்த ரூ.15 லட்சத்தையும் திரும்ப பெற்றுள்ளார். போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளார். பாலா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
விசாரித்த கொச்சி போலீசார் நடிகர் பாலா மீது வழக்கு பதிவு செய்தனர். தன்னை அவதூறு பதிவிடுவதாக அமிர்தா சுரேஷ் கொடுத்த புகாரில் ஏற்கனவே பாலாவை கொச்சி போலீசார் கைது செய்தனர்.

