காங்கிரஸ் கட்சியுடன் விவாகரத்து: கார்கேவுக்கு தேவகவுடா பதிலடி
காங்கிரஸ் கட்சியுடன் விவாகரத்து: கார்கேவுக்கு தேவகவுடா பதிலடி
UPDATED : மார் 18, 2026 08:05 PM
ADDED : மார் 18, 2026 08:03 PM

பெங்களூரு: என்னை கட்டாயப்படுத்தி காங்கிரசுடன் திருமணம் செய்து வைத்தனர். அது மிகவும் கொடுமைப்படுத்திய உறவு என்பதால், நான் அதனை விவாகரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது என காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு முன்னள் பிரதமர் தேவகவுடா பதிலடி கொடுத்து உள்ளார்.
இது தொடர்பாக தேவகவுடா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது நீண்டகால நண்பர் கார்கே, பார்லிமென்டில் இன்று காங்கிரசை காதலித்துவிட்டு மோடியை திருமணம் செய்து கொண்டதாக இளகிய மனதுடன் கூறியுள்ளார். அதற்கான காரணமும் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நாளை மார்ச் 19 ல் நடக்கும் உகாதி கொண்டாட்டத்தில் பங்கேற்க கிளம்பி விட்டதால், கார்கே பேசும் போது நான் அவையில் இல்லை.
திருமணம் என்ற மொழியில், எனது நண்பருக்கு நான் பதிலளிக்க வேண்டும் என்றால், என்னை கட்டாயப்படுத்தி காங்கிரசுடன் திருமணம் செய்து வைத்தனர். அது மிகவும் கொடுமைப்படுத்திய உறவு என்பதால், நான் அதனை விவாகரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது.
குமாரசாமிக்கு பதவி
கடந்த 2018 ம் ஆண்டு குலாம் நபி ஆசாத்தை அனுப்பிய காங்கிரஸ் கட்சி, குமாரசாமிக்கு முதல்வர் பதவியை வழங்க முன்வந்தது. இதற்கு நான் ஒப்புதல் அளிக்கவில்லை. கார்கேவை முதல்வராக்க வேண்டும் என்பதை அனைவர் முன்னிலையில் தெரிவித்தேன். அப்போது சித்தராமையாவும் அங்கு இருந்தார். ஆனால், குமாரசாமியை தலைமையேற்க ஆசாத் வலியுறுத்தினார்.
ஏமாற்றியது
ஆனால், இந்த ஆடல், பாடல் மற்றும் திருமணத்திற்கு பிறகு 2019ல் அவர்கள் என்ன செய்தனர்? காங்கிரஸ் எங்களை ஏமாற்றியது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எத்தனைபேர் பிரிந்து பாஜவிடம் சென்றனர். அவர்களை யார் அனுப்பி வைத்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம். கட்சி மாறி அனுப்பியவர்கள் மீது அன்றைய தினம் நடவடிக்கை எடுத்து இருந்தால், காங்கிரசின் சிறந்த தலைவராக கார்கே இருந்திருப்பார்.
வேறு வழியில்லை
உண்மையில் நான் காங்கிரஸ் கூட்டணியை விட்டு செல்லவில்லை. அவர்கள் தான் கூட்டணியை விட்டு சென்றார்கள். வேறு வழியே இல்லாத நிலையில் விவாகரத்து செய்தேன். இன்னும் நிலையான ஒரு கூட்டணியைத் தேடிக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லாத ஒரு சூழலில் அதை செய்தேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தேவகவுடா கூறியுள்ளார்.
கார்கே பேச்சு
ராஜ்யசபா எம்பிக்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் கார்கே, தேவகவுடாவை 54 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தெரியும். அவருடன் இணைந்து நிறைய தருணங்களில் பணியாற்றி உள்ளேன். பின்னர் ஏனோ தெரியவில்லை, காங்கிரசை காதலித்துவிட்டு மோடியை(பாஜவை) திருமணம் செய்து கொண்டார் எனக்கூறினார்.

