பட்டாசாய் பறந்த தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவு! என்ன ஒரு கலக்கல் சாதனை!
பட்டாசாய் பறந்த தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவு! என்ன ஒரு கலக்கல் சாதனை!
ADDED : நவ 03, 2024 11:20 AM

சென்னை: தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவில் அரசு விரைவு பஸ் போக்குவரத்துக் கழகம் புதிய சாதனை படைத்துள்ளது.
தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். பயணிகளின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்களை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.
தற்போது தீபாவளி முடிந்துவிட்டதால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு என்று பிரத்யேக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில், தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவில் அரசு விரைவு பஸ் போக்குவரத்துக் கழகம் புதிய சாதனை படைத்துள்ளது.
ஒரே நாளில் கிட்டத்தட்ட 75,000 பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பாகவே tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி இருந்தது. அதன் எதிரொலியாக ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கின்றனர்.
இந்த முன்பதிவு எண்ணிக்கை கடந்த காலங்களை விட மிக அதிகம். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது என்று அரசு விரைவு பஸ் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறி உள்ளனர். இன்னமும் தீபாவளியை கொண்டாட ஊருக்குச் சென்ற ஆயிரக்கணக்கானோர் சென்னை திரும்பாமல் உள்ளனர். அடுத்து வரக்கூடிய நாட்களில் அவர்கள் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.