தேர்தல் பணியை துவக்குங்கள்: தொண்டர்களுக்கு இ.பி.எஸ்., வேண்டுகோள்
தேர்தல் பணியை துவக்குங்கள்: தொண்டர்களுக்கு இ.பி.எஸ்., வேண்டுகோள்
UPDATED : ஜன 15, 2024 12:53 PM
ADDED : ஜன 15, 2024 12:52 PM

சேலம்: அடுத்து வரும் தேர்தல் விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்பக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும். இதற்கென தொண்டர்கள் பணியாற்ற துவங்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பேசினார்.
அதிமுக சேலம் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் ஓமலூர், திண்டமங்கலம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கலந்துகொண்டு 108 பானைகளில் வைக்கப்பட்ட பொங்கலை கண்ணனூர் மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபட்டார். பின்னர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இபிஎஸ் பேசியதாவது: தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது போல், இந்தாண்டு நாட்டு மக்களுக்கு நல்ல வழி பிறக்கும். இரவு, பகல், மழை, வெயில் என்று பாராமல் நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய மக்களின் உன்னதமான நாள் தை திருநாள். நானும் ஒரு விவசாயி. எனது இல்ல நிகழ்ச்சியாக இதை பார்க்கிறேன். இன்று எனது குடும்பத்தினர் பொங்கல் கொண்டாடிவரும் வேளையில் உங்களுடன் நான் பொங்கல் கொண்டாடுகிறேன்.
இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் மக்கள் என்ன நன்மை அடைந்தனர்? மக்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? கொள்ளை அடித்ததுதான் அவர்களின் சாதனை. 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் உதயநிதியும், சபரீசனும் உள்ளனர் என்று திமுக அமைச்சரே கூறி உள்ளார். கொள்ளையடித்து ஆட்டம் போட்டவர்கள் சிறையில் உள்ளனர். இன்னும் சிலர் சிறை செல்ல உள்ளனர்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி மிக மோசமான ஆட்சியாக மக்கள் எண்ணுகின்றனர். இந்த ஆட்சி எப்போது அகலும் என்று மக்கள் எதிர்பார்கின்றனர். லோக்சபா தேர்தல் விடியா அரசுக்கு பாடமாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் விடியா அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஸ்டாலின் தமிழக முதல்வராக இருக்கலாம். சேலம் மாவட்டத்தில் 11 தொகுதியில் 10 தொகுதி அதிமுக வெற்றி பெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்படலாம். நமது கட்சியினர் எப்போதும் தயாராக இருந்து தேர்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.