ADDED : பிப் 10, 2024 11:32 PM
பார்லிமென்டில் ராமர் கோவில் திறப்பு குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அதில் தி.மு.க., - எம்.பி.,க் கள் பங்கேற்கவில்லை.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை மையமாக வைத்து கோஷங்கள் எழுப்பி விட்டு லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று காலையில் சபை அலுவல்கள் துவங்கியதுமே, தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் சேர்ந்து ஆவேசமாக குரல் எழுப்பத் துவங்கினர்.
பொதுவாக டி.ஆர்.பாலு மட்டுமே எழுந்து பேச அனுமதி கேட்டு நிற்பார். அனுமதி கிடைத்தால் பேசுவார்.
இல்லையெனில், அதன்பின் மற்ற எம்.பி.,க் களும் சேர்ந்து குரல் எழுப்புவர். ஆனால், நேற்று அவர்களது வேகமும், காட்சிகளும் வழக்கத்துக்கு மாறாக இருந்தன. பாலு மட்டுமல்லாது, அனைவருமே எடுத்த எடுப்பிலேயே சபையின் முன்வரிசைக்கு வந்து கோஷங்கள் போடத் துவங்கினர்.
அப்போது பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ''என்ன சொல்ல விரும்புகிறீர்கள். சொல்லுங்கள்,'' என்றார். பின், பாலுவை உற்றுப் பார்த்தபடி, ''நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா அல்லது வெளியே செல்ல விரும்புகிறீர்களா,'' என்று கேட்டார்.
இதையடுத்து பேசத் துவங்கிய பாலு, ''தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சாதகமான பதில் வரவில்லை,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ''இன்று மிகவும் முக்கியமான, பெருமை வாய்ந்த விவாதம் நடைபெற போகிறது.
''ராமர் கோவில் திறப்பு, ராமர் சிலை பிரதிஷ்டை உள்ளிட்டவற்றின் மீது அனைவரும் பேசவுள்ளனர்.
''இன்றைக்கு கேள்வி நேரமும் இல்லை. ஜீரோ நேரமும் இல்லை. ஒத்திவைப்பு வைப்பு தீர்மானம் எதையும் எடுத்துக் கொள்ள முடியாது என்பது, மூத்த எம்.பி.,யான உங்களுக்கு தெரியும்தானே,'' என்றார்.
இதை ஏற்றுக் கொள்ள மறுத்த தி.மு.க., - எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர். 'காப்பாற்று காப்பாற்று; தமிழக மீனவர்களை காப்பாற்று' என கோஷங்கள் போட்டு விட்டு, ஓரிரு நிமிடங்களில் சபையிலிருந்து வெளிநடப்பு செய்து விட்டனர்.
- நமது டில்லி நிருபர் -