ADDED : மார் 20, 2025 10:44 PM

போராட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில், சபை விதிகளுக்கு மாறாக, பார்லிமென்ட்டின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் 'டி-சர்ட்' அணிந்து வந்து, அமளியில் இறங்கிய, தி.மு.க., -- எம்.பி.,க்களை, சபாநாயகர் கடுமையாக எச்சிரித்தார். கூடவே, மீண்டும் மீண்டும் கோஷங்கள் எழுப்பியதால், அலுவல்களை நடத்த முடியாமல், லோக்சபாவும் ராஜ்யசபாவும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் துவக்கத்தில், புதிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தொடர்பாக, தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கடுமையாக விமர்சித்தார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். இதற்கு தி.மு.க., - எம்.பி.,க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க, அமைச்சர் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதும், தி.மு.க., - எம்.பி.,க்கள் அமைதியாயினர்.
சில நாட்கள் அமைதியாக இருந்த தி.மு.க., - எம்.பி.,க்கள், கடந்த இரு தினங்களாக, தொகுதி மறுவரையறை குறித்த பிரச்சனையை பார்லிமென்டில் கிளப்பினர்.
நேற்று காலை, தி.மு.க.,வின் அனைத்து எம்.பி.,க்களும் வெள்ளை நிற டி சர்ட் அணிந்தபடி, பார்லிமென்ட் கட்டடத்தின் மகர் துவார் பகுதிக்கு வந்தனர்.
டி-சர்ட்டில் 'தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும்' என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன. கூடவே, எம்.பி.,க்கள் அணிந்திருந்த மப்ளரில், 'அன் டெமாக்ரடிக்' என்று ஒருபுறமும் 'அன் சிவிலைஸ்டு' என்று இன்னொரு புறமும் எழுதப்பட்டு இருந்தது.
சபை நடவடிக்கைகளில் பங்கு பெற, டி - சர்ட்களுடன் தி.மு.க., - எம்.பி.,க்கள் வந்துள்ள தகவல் சபாநாயகர் ஓம் பிர்லா அலுவலகத்துக்குச் சென்றது.
அதனால், இறுக்கமான முகத்துடன் லோக்சபாவுக்கு வந்த சபாநாயகர் ஓம் பிர்லா, தி.மு.க., - எம்.பி.,க்கள் இருந்த பக்கம் நோக்கி எச்சரிக்கும் வகையில் பேசினார்.
அவர் பேசியதாவது:
சபை விதி எண் 249ன் படி, சபைக்குள் டி சர்ட் அணிந்த வருவதோ, பதாகைகளை தாங்கி வருவதோ கூடாது. கண்ணியத்தை காக்க வேண்டும். சபையின் மதிப்பு காக்கப்பட வேண்டும்.
அவையை விட்டு உடனடியாக வெளியேறுங்கள். இல்லை, உடையை மாற்றிவிட்டு சபைக்கு வாருங்கள். இப்படி அவர் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்க, தி.மு.க,- எம்.பி.,க்கள், அவருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து, சபையை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவித்தார் சபாநாயகர்.
இந்த அறிவிப்பால், தி.மு.க.,-எம்.பி.,க்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். குறிப்பாக தயாநிதி மாறன் சக எம்.பி.,க்களுடன் குதித்தபடியே சந்தோஷத்தை பகிர்ந்தார். ஒருவர் மீது மற்றொருவர் அணிந்திருந்த மப்ளரை மாறி மாறிப் போட்டு விளையாடினர்.
பின், 12:00 மணிக்கு, சபை மீண்டும் கூடியது. அப்போதும், தி.மு.க., - எம். பி.,க்கள், சபையை விட்டு வெளியேறாமல் இருக்க, சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இதே போலவே, ராஜ்யசபாவிற்கும் தி.மு.க., - எம்.பி.,க்கள் வாசகங்கள் தாங்கிய டி-சர்ட் அணிந்து செல்ல, சபை தலைவர் ஜெகதீப் தன்கர், சபையை ஒத்தி வைத்தார்.
இப்படி நேற்று லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளும் முழுதும் ஒத்துவைக்கப்பட்டு, நாள் முழுதும் அலுவல் எதுவும் இன்றி முடங்கியது.
-நமது டில்லி நிருபர்-