UPDATED : ஜூன் 07, 2026 07:03 AM
ADDED : ஜூன் 07, 2026 12:24 AM

புதுடில்லி: தி .மு.க., உடனான உறவை, காங்கிரஸ் முறித்துக்கொண்டு, த.வெ.க.,வுடன் கை கோர்த்து, அமைச்சர் பதவிகளையும் பெற்றுக்கொண்டது. இதையடுத்து, 'லோக்சபாவில், காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் அமர விருப்பமில்லை; தனியாக, 'சீட்' ஒதுக்க வேண்டும்' என்று, சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதினார், பார்லிமென்ட் தி.மு.க., தலைவர் கனிமொழி. இதையடுத்து, அவர்களுக்கு தனி சீட் ஒதுக்க ஒப்புக்கொண்டார் சபாநாயகர்.
லோக்சபாவில், 'இண்டி' கூட்டணிக்கென்று முதல் வரிசையில் ஐந்து சீட்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் காங்கிரசின் கே.சி.வேணுகோபால், அடுத்து ராகுல், டி.ஆர்.பாலு, கனிமொழி, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அமர்ந்து வந்தனர்.
இதுவரை, இரண்டு முதல் வரிசை சீட்களில் அமர்ந்த தி.மு.க.,விற்கு, இனி ஒரு சீட் தான் ஒதுக்கப்படும்.
அதில் யார் அமர்வர்? டி.ஆர். பாலுவா அல்லது கனிமொழியா? அத்துடன் ராகுல் பக்கத்தில் தி.மு.க., - எம்.பி., உட்கார மாட்டார்.
இதுவரை பார்லி.,யில் காங்கிரஸ் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு அளித்து வந்த தி.மு.க., இனி அதைச் செய்யாது. பா.ஜ., கொண்டு வரும் மசோதாக்களுக்கே, தி.மு.க., ஆதரவு அளிக்கும் என, அதன் தலைவர்களிடம் கனிமொழி சொல்லிவிட்டதாக, டில்லியில் செய்திகள் அடிபடுகின்றன.
தன் முதுகில் குத்திய காங்கிரசுக்கு பாடம் கற்பிப்பதுடன், த.வெ.க.,விற்கும் குடைச்சல் கொடுக்க, பா.ஜ.,வை மறை முகமாக ஆதரிக்க, தி.மு.க., முடிவெடுத்து உள்ளதாக பேசப்படுகிறது
