‛எனக்கு ஏதாவது பயிற்சி இருக்கிறதா?' திறன் மேம்பாட்டு கமிஷனிடம் கேட்ட மோடி
‛எனக்கு ஏதாவது பயிற்சி இருக்கிறதா?' திறன் மேம்பாட்டு கமிஷனிடம் கேட்ட மோடி
ADDED : ஆக 17, 2025 11:37 PM

புதுடில்லி: திறன் மேம்பாட்டு கமிஷனின் முன்னாள் தலைவர் அடில் ஜைனுல்பாய், தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், கமிஷன் தலைவராக தான் இருந்த போது, தனக்கு ஏதாவது பயிற்சி திட்டம் இருக்கிறதா என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுதும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் திறன் மற்றும் அறிவை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியால், திறன் மேம்பாட்டு கமிஷன் 2021ல் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன், 'கர்மயோகி' திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது.
இதன் முதல் தலைவராக, 2021 ஏப்., 1ல், இந்திய தரக்குழுவின் தலைவராக இருந்த அடில் ஜைனுல்பாய் நியமிக்கப்பட்டார். திறன் மேம்பாட்டு கமிஷன் தலைவராக, நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில், அவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது.
இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில் ஜைனுல்பாய் கூறியுள்ளதாவது:
திறன் மேம்பாட்டு கமிஷன் அமைக்கப்பட்டதற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையே காரணம். நிகழ்ச்சி நிரலை தயாரித்து அவர் எங்களை ஊக்கப்படுத்தினார். இலக்கை நிர்ணயித்த அவர், அதை அடைய முடிந்ததை செய்யச் சொன்னார்.
இதன்பின், அவரை சந்தித்து சில தகவல்களை தொகுத்து வழங்கினேன். அதை பார்த்த அவர், 'இதில் ஒரு முக்கியமான விஷயம் இடம்பெறவில்லையே' என்றார். உடனே, நான் அதிர்ச்சி அடைந்தேன். பின், 'எனக்கான பயிற்சி திட்டத்தை நீங்கள் உருவாக்கவில்லை' என, பிரதமர் மோடி கூறினார்.
திறன் மேம்பாட்டு கமிஷன் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. கர்மயோகி திட்டத்தை பல நாடுகள் விரும்புகின்றன. தங்களது ஊழியர்களின் திறனை மேம்படுத்த அந்த திட்டத்தை டிஜிட்டல் மூலம் அணுக, அந்நாடுகள் கோருகின்றன. இத்திட்டத்தை கரீபியன் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.