அரசியல் கலாசாரம் தெரியுமா? ரெட்டியை சாடிய துக்காராம்!
அரசியல் கலாசாரம் தெரியுமா? ரெட்டியை சாடிய துக்காராம்!
ADDED : நவ 03, 2024 11:33 PM

பல்லாரி; ''ஜனார்த்தன ரெட்டிக்கு அரசியல் கலாசாரம் தெரியாது,'' என்று, பல்லாரி காங்கிரஸ் எம்.பி., துக்காராம் கூறினார்.
பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இடைத்தேர்தலில் சண்டூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரான, எனது மனைவி அன்னபூர்ணா 100க்கு 100 சதவீதம் வெற்றி பெறுவார். கடந்த 2008ல் இருந்து நான்கு முறை சண்டூரில் எம்.எல்.ஏ.,வாக இருந்து உள்ளேன். ஜனார்த்தன ரெட்டி வருகையால், சண்டூரில் எங்கள் பலம் குறைய போவது இல்லை.
கடந்த 2008 தேர்தலில் பல்லாரி மாவட்டத்தில் சண்டூரில் மட்டும் தான், காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அப்போது எங்களுக்கு ஜனார்த்தன ரெட்டி கொடுக்காத தொந்தரவு இல்லை. அனைத்தையும் தாங்கி கொண்டு அரசியல் செய்தோம்.
காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்வதாக, ஜனார்த்தன ரெட்டி கூறுகிறார். கடந்த சட்டசபை தேர்தலில், பல்லாரி தொகுதியில் அவரது மனைவி அருணாவுக்கு, ஏன் சீட் கொடுத்தார். அவருக்கு அரசியல் கலாசாரம் பற்றி தெரியாது. இதனால் அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, நான் பதில் அளிக்க மாட்டேன்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டிற்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் அந்த முறைகேடு, தேர்தல் முடிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பல்லாரி லோக்சபா தொகுதியில், நிறைய வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டி உள்ளது. அதற்கு தான் மக்கள், என்னை எம்.பி., ஆக்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.