வெளிநாட்டினரை நாடு கடத்த நல்ல நேரம் பார்க்கிறீர்களா? அசாம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
வெளிநாட்டினரை நாடு கடத்த நல்ல நேரம் பார்க்கிறீர்களா? அசாம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : பிப் 05, 2025 02:17 AM
புதுடில்லி:'சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக கைதான வெளிநாட்டினரை நாடு கடத்த நல்ல நேரம் பார்க்கிறீர்களா?' என, அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக கைதான வெளிநாட்டினர் மற்றும் அங்குள்ள தடுப்பு காவல் மையங்கள் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அடுக்கடுக்காக கேள்வி
அப்போது, அசாம் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், 'கைதான வெளிநாட்டினரை நீண்ட காலமாக தடுப்பு காவல் மையங்களிலேயே ஏன் வைத்துள்ளீர்கள்?
வெளிநாட்டினர் என தெரிந்த உடனேயே, அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பாதது ஏன்? அவர்களது முகவரி தெரியவில்லை என கூறுவதை ஏற்க முடியாது; அது நம் கவலை கிடையாது.
'கைதானவர், வெளிநாட்டவர் என தெரிந்ததுமே, நாடு கடத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் நல்ல நேரம் வருவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறீர்களா?' என, நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.
மேலும், 'அசாமில் ஏராளமான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எத்தனை பேரை இதுவரை நாடு கடத்தி இருக்கிறீர்கள்?
'தடுப்புக்காவல் மையங்களில் இருக்கும் வெளிநாட்டினர் 63 பேரை, இரண்டு வாரங்களுக்குள் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை துவங்கி விட்டு, அது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பயங்கரவாதி கைது
அசாம் மாநிலம் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தில் சிறப்பு படையினர் நடத்திய சோதனையில், அன்சருல்லா பங்க்ளா டீம் மற்றும் ஜமாத் உல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளில் உறுப்பினராக இருந்த நசிமுதீன் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.
பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான நுார் இஸ்லாம் மண்டலின் நெருங்கிய கூட்டாளியான நசிமுதீன் மீது ஆயுத சட்டம், வெடிகுண்டு சட்டம், பாஸ்போர்ட் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.