மணிப்பூர் நம்முடையதல்ல என பா.ஜ., நினைக்கிறதோ: ராகுல் கேள்வி
மணிப்பூர் நம்முடையதல்ல என பா.ஜ., நினைக்கிறதோ: ராகுல் கேள்வி
UPDATED : ஜன 14, 2024 07:50 PM
ADDED : ஜன 14, 2024 07:45 PM

இம்பால்: மணிப்பூரை இந்தியாவின் ஓர் அங்கமாகவே மோடி, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., கருதவில்லை. நாங்கள் மணிப்பூரில் அமைதி, நல்லிணக்கத்தை மீட்போம். மணிப்பூரில் நடைபயணம் 2.0 துவக்கி வைத்து காங்., எம்.பி., ராகுல் பேசினார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ராகுல் தமது 2-வது கட்ட யாத்திரையை தொடங்கி உள்ளார். பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் மணிப்பூர் முதல் மும்பை வரை இந்த யாத்திரையை ராகுல் மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் இன்று ராகுல் தமது யாத்திரையை தொடங்கினார்.
நாட்டின் 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 லோக்சபா தொகுதிகள், 337 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக ராகுலின் 2-வது கட்ட யாத்திரை அமைகிறது. மணிப்பூரில் இருந்து 67 நாட்கள் பேருந்து மூலமாக இந்த யாத்திரையை ராகுல் மேற்கொள்கிறார். மொத்தம் 6,713 கிமீ இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: மணிப்பூரின் லட்சக்கணக்கான மக்கள் பேரிழப்புகளை எதிர்கொண்டு நிற்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி ஆறுதல் சொல்லக் கூட இங்கே வரவில்லை. உங்கள் கண்ணீரை துடைக்க, உங்களின் கரம் பற்றி அரவணைத்து ஆறுதல் சொல்லவில்லை பிரதமர் மோடி. ஒருவேளை பிரதமர் மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை என நினைக்கிறார்களோ? உங்கள் வலி அவர்களுடைய வலியாக உணர்ந்து கொள்ளப்படவில்லையே என்றார்.

