தேர்தலில் காங்., வேட்பாளர்களை ஜமாத் அமைப்பு தேர்வு செய்கிறதா?
தேர்தலில் காங்., வேட்பாளர்களை ஜமாத் அமைப்பு தேர்வு செய்கிறதா?
ADDED : ஆக 30, 2025 03:18 AM

புதுடில்லி: ''அசாம் முதல்வர் ஹிமந் த பிஸ்வ சர்மா காங்கிரசில் இருந்த போது, அவருக்கு தேர்தலில் சீட் கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தி, அக்கட்சி தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினேன்,'' என, ஜாமியத் உலமா- - இ - -ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அம்மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு காங்., எதிர்ப்பு தெரிவிக்கிறது.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, முன்பு காங்கிரசில் இருந்தார். அக்கட்சி சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அமைச்சராகவும் பதவி வகித்தார்.
கருத்து வேறுபாட்டால், 2014ல் காங்கிரசில் இருந்து விலகிய ஹிமந்த பிஸ்வ சர்மா, 2015 ஆகஸ்டில் பா.ஜ.,வில் சேர்ந்தார். 2016 சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்று அமைச்சரான அவர், 2021ல், முதல் வராக பதவியேற்றார்.
இந்நிலையில், ஜாமியத் உலமா- - இ - -ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி நேற்று கூறியதாவது:
காங்கிரசில் ஹிமந்த பிஸ்வ சர்மா இருந்த போது, தேர்தலில் அவருக்கு சீட் வழங்க வேண்டாம் என வலியுறுத்தி, அக்கட்சி தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினேன். அவர், ஆர்.எஸ்.எஸ்., மனநிலை கொண்டவர் என, குறிப்பிட்டிருந்தேன். அதை நிரூபிக்கும் வகையில், தற்போது அசாமை அவர் அழித்துக் கொ ண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், ''ராகுலை தொடர்ந்து, அர்ஷித் மதானி என்னை மிரட்டி உள்ளார்.
''சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றி, பழங்குடி மக்களின் நில உரிமைகளை உறுதி செய்வோம். அசாம் மக்களுடன் இணைந்து ராகுலை தோற்கடிப்போம்,'' என்றார்.
முடிவு எடுப்பது யார்? காங்., சார்பில் யார் யார் போட்டியிட வேண்டும் என்பதை அக்கட்சி தலைவர்கள் முடிவு செய்கின்றனரா அல்லது இஸ்லாமிய தலை வர்கள் தீர்மானிக்கின்றனரா? தவறான பாதையில் காங்., செல்கிறது என்பது நிரூபணமாகிறது. - அமித் மாள்வியா, ஐ.டி., பிரிவு தலைவர், பா.ஜ.,