கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமோ? குண்டு எறிதலில் அசத்திய வெங்கடேஷ்!
கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமோ? குண்டு எறிதலில் அசத்திய வெங்கடேஷ்!
ADDED : செப் 27, 2024 07:58 AM

கர்நாடகாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், இந்திய அணியில் பல்வேறு விளையாட்டுகளில் இடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இவர்களில் ஒருவர் வெங்கடேஷ்.
குண்டு எறிதல் வீரரான வெங்கடேஷ், 4.2 அடி உயரம் உள்ளவர். மாவட்ட, மாநில அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெங்கடேஷ் வெற்றி பெற்று அசத்தினார். இவரது திறமையால், தேசிய, உலக அளவில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
ஜெர்மனியின் பெர்லினில் கடந்த 1994ம் ஆண்டு நடந்த முதலாவது சர்வதேச பாரா ஒலிம்பிக் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக விளையாடினார்.
இதில் பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், 1999ல் ஆஸ்திரேலியாவில் நடந்த சதன் கிராஸ் மல்டி டிசிபிலிட்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்று அசத்தினார்.
எல்.ஜி., உலகக் கோப்பையில் கடந்த 2002ல் வெள்ளி பதக்கமும், 2004 ஸ்வீட்டிஸ் ஓப்பன் ட்ராக் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.
பின், 2004 முதல் 2012 வரை நடந்த பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றார். இவரது திறமையை பாராட்டி கர்நாடக அரசு, 'ஏகலைவா, ராஜ்யோத்சவா' விருதுகளை வழங்கி கவுரவித்தது.
கடந்த 2021 ஜனவரி 26ல் இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான கர்நாடகா பாரா பேட்மின்டன் சங்க செயலராகவும் பணியாற்றிய அனுபவம் உடையவர். குண்டு எறிதலில் சாதிக்க நினைப்போருக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
-- நமது நிருபர் --