இங்கிலீஷ் கூட பேசத் தெரியாதா? கணவன் வீட்டார் சித்ரவதை; கேரளாவில் இளம்பெண் தற்கொலை
இங்கிலீஷ் கூட பேசத் தெரியாதா? கணவன் வீட்டார் சித்ரவதை; கேரளாவில் இளம்பெண் தற்கொலை
ADDED : ஜன 16, 2025 07:36 AM

மலப்புரம்: இங்கிலீஷ் பேச்சுத்திறனை விமர்சித்து கணவனின் குடும்பத்தார் சித்ரவதை செய்து வந்ததால், விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சஹானா மும்தாஜ்,19, என்பவர் பி.எஸ்.சி., கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே, அப்துல் வஹாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் அபுதாபியில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சஹானா நேற்று முன்தினம் (ஜன.,14) வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த முடிவுக்கு மருமகன் அப்துல் வஹாப்பின் குடும்பத்தினரே காரணம் என்று சஹானாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சஹானாவின் தோற்றம் மற்றும் இங்கிலீஷ் பேச்சுத்திறனை காரணம் காட்டி, அவரது கணவர் அப்துல் வஹாப்பும், அவர்களின் பெற்றோரும் சித்ரவதை செய்து வந்ததாகக் அவர் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், திருமணமான 22 நாட்களில் அப்துல் வஹாப் அபுதாபி சென்று விட்டதாகவும், அங்கு சென்ற பிறகு, சஹானாவுடன் செல்போனில் பேசுவதை தவிர்த்து விட்டதாக அவரது மாமா அப்துல் சலாம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், சஹானாவின் தோற்றம் மற்றும் இங்கிலீஷ் பேச்சுத்திறனை விமர்சித்து தொடர்ந்து மெசேஜில் சித்ரவதை செய்து வந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக கொண்டாட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.