உ.பி., அரசின் மதரசா கல்வி வாரிய சட்டம் செல்லும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உ.பி., அரசின் மதரசா கல்வி வாரிய சட்டம் செல்லும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
UPDATED : நவ 06, 2024 05:40 PM
ADDED : நவ 05, 2024 03:26 PM

புதுடில்லி: 'மதரசா கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் உத்தர பிரதேசம் மதரசா கல்வி வாரியச் சட்டம் செல்லும். அதே நேரத்தில், மதரசாக்கள் வழங்கும் சில பட்டப் படிப்புகளுக்கு இது பொருந்தாது' என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முஸ்லிம்களுக்கு மதம் சார்ந்த கல்வி வழங்கும் மதரசாக்களை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு, உத்தர பிரதேசம் மதரசா கல்வி வாரியச் சட்டம் 2004ல் அமல்படுத்தப்பட்டது.
சான்றிதழ்
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் அளித்த உத்தரவில், அது செல்லாது என்று கூறியிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக இருப்பதால் இந்தச் சட்டம் செல்லாது என, உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்த நிலையில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது: மதரசா கல்வி வாரியச் சட்டம், மதரசாக்களில் அளிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டுஉள்ளது. மேலும், சிறுபான்மையினருக்கு தரமான கல்வி கிடைப்பதுடன், முறையாக தேர்வுகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்குவதே இந்த சட்டத்தின் நோக்கமாக உள்ளது. மதரசாக்களில் படிப்போர், மற்ற மாணவர்களைப் போல உயர்கல்வி பெறுவதுடன், சமூக வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான திறன்களை பெறுவதே இந்த வாரியத்தின் நோக்கமாகும்.தனிமனித உரிமை, கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றுடன் இணைத்தே, மதம் மற்றும் மொழி ரீதியில் சிறுபான்மையினருக்கான உரிமையையும் பார்க்க வேண்டும்.
அந்த வகையில், இந்த கல்வி வாரியத்தை உருவாக்கும் சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின்படி செல்லும்.அதனால், உத்தர பிரதேசம் மதரசா கல்வி வாரியச் சட்டம் செல்லும். இந்தச் சட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாநிலத்தில் தற்போதுள்ள மதரசாக்கள் தொடர்ந்து செயல்படலாம்.
அரசியலமைப்பு
மத சுதந்திரம், தனிமனித சுதந்திரம் மீறப்படுகிறது என்பது போன்ற காரணங்களைக் கூறி, அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக உள்ளதாக, ஒரு சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை இவ்வாறு அறிவிக்க முடியும்.
அனால், இந்தக் காரணங்களைக் கூறி ஒரு சட்டத்தை ரத்து செய்ய முடியாது. சட்டம் இயற்றுவதற்கான உரிய அதிகாரம் இல்லாதது அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு அளித்துள்ள சம உரிமை, சமத்துவத்துக்கு எதிராக உள்ளது போன்ற காரணங்களால் மட்டுமே ரத்து செய்ய முடியும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.