ஓராண்டில் இந்தியாவில் நாய் கடிக்கு ... 20,000 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் பகீர் தகவல்
ஓராண்டில் இந்தியாவில் நாய் கடிக்கு ... 20,000 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் பகீர் தகவல்
UPDATED : செப் 22, 2024 01:04 AM
ADDED : செப் 21, 2024 11:55 PM

புதுடில்லி: நம் நாட்டில் ஆண்டுதோறும், 20,000 பேர் நாய் கடியால் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது; இது, உலகளவில் நாய் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில், 35 சதவீதமாகும்.
![]() |
நம் நாட்டின் பல்வேறு நகரங்களில், தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகிறது. தெருவில் சுற்றித் திரியும் இந்த நாய்கள் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகும் போது, எதிரில் தென்படுபவர்களை கடித்து குதறுகின்றன.
உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 'உலகம் முழுதும் ஆண்டுக்கு, 59,000 பேர் நாய் கடியால் இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு, 20,000 பேர் இறக்கின்றனர்' என, தெரிவித்துள்ளது.
இது, உலகளவில் நாய் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில், 35 சதவீதம். இதற்கிடையில், நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நம்நாட்டில், 2021ல் இருந்து படிப்படியாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகமும் தெரிவித்து உள்ளது.
கடந்த 2021ல் 17 லட்சம் பேர் நாய் கடிக்கு ஆளானதாகவும், 2022ல் இந்த எண்ணிக்கை 21.80 லட்சம், 2023ல் 30 லட்சமாகவும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023ல் நாய் கடியால் பாதிக்கப்பட்டோர், 80 சதவீதம் அதிகம்.
இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த 2023ல் நம் நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 350 பேர் நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் பேர் நாய் கடிக்கு ஆளாகி உள்ளனர். அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில், 250 மற்றும் 195 ஆக இருந்தது.
தமிழகத்தில், 2023ல் 4.04 லட்சம் பேரை நாய் கடித்துள்ளது. இது, நாட்டின் மொத்த நாய் கடி பாதிப்பில், 13 சதவீதம். தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் கர்நாடகா உள்ளது. அங்கு கடந்த ஆண்டில் இரண்டு லட்சம் பேரை நாய் கடித்துள்ளது.
நாய் கடியால் ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்க, கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, 24.53 லட்சம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
நாய் கடித்தால் மனிதர்களுக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், மத்திய அரசு, தேசிய ரேபிஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, மனிதர்களுக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி ஒன்றின் விலை 250 ரூபாய்.
இதை, அரசு மருத்துவமனைகள் இலவசமாக மக்களுக்கு போட, சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு நிதி வழங்குகிறது.
நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் வாயிலாகவே, நாய் கடியில் இருந்து மக்களை காக்க முடியும் என்பதால், விலங்குகள் கருத்தடை சட்டம் 2023ஐ மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இதன்படியே, நாய்களுக்கான கருத்தடை திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தி வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.