ADDED : ஏப் 04, 2025 06:50 AM
ஹாவேரி: விவசாயியின் நிலத்தில், மூன்று நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் ஒரு குண்டு வெடித்ததில், நாய் உயிரிழந்தது.
ஹாவேரி மாவட்டம், சவனுார் தாலுகாவின் ஜல்லபுரா கிராமத்தில் விவசாய நிலத்தில் நேற்று காலையில், நாய் ஒன்று உணவு தேடும் எண்ணத்தில், மண்ணை தோண்டியது. அப்போது மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை வாயில் கடித்ததில், குண்டு வெடித்தது. இதில் நாய் உயிரிழந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், உடனடியாக சவனுார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், நிலத்தில் சோதனை நடத்திய போது, மூன்று நாட்டு வெடிகுண்டுகளை கண்டுபிடித்தனர். அதில் ஒன்று வெடித்திருந்தது.
இதை மண்ணில் புதைத்து வைத்தது யார் என்பது தெரியவில்லை. வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்திருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். வெடிக்காத இரண்டு குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை வைத்தவரை தேடி வருகின்றனர்.

