வரிசையில் நிற்காமல் தரிசனம் என ரூ.10,000 வாங்கிய டோலிகள் கைது
வரிசையில் நிற்காமல் தரிசனம் என ரூ.10,000 வாங்கிய டோலிகள் கைது
ADDED : அக் 31, 2025 01:20 AM
சபரிமலை:  சபரிமலையில், பக்தர்களிடம் வரிசையில் நிற்காமல் தரிசனம் எனக்கூறி, 10,000 ரூபாய் வாங்கிய டோலி தொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறந்திருந்த போது, அக்., 18ல் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்வதில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. அப்போது மரக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்த கோழிக்கோட்டை சேர்ந்த பக்தர் குழுவினரிடம், சிலர் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல், தரிசனத்திற்கு வசதி செய்து தருவதாக கூறி, 10,000 ரூபாய் பெற்றனர்.
பின், அவர்களை அழைத்து சென்று சன்னிதானம், 18ம் படிக்கு முன்புறமுள்ள வாபர் நடை அருகே விட்டு சென்றனர்.
இது பற்றி அந்த பக்தர்கள், தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர்.
அவர்கள் விசாரணை நடத்தி, பம்பை போலீசில் கொடுத்த அறிக்கையின்படி, டோலி தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டம், ராணி கோவிலை சேர்ந்த கண்ணன், 31, ரகு, 27, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களின், டோலி சுமப்பதற்கான லைசென்சை ரத்து செய்ய, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

