தொடரும் ஓநாய்கள் அட்டகாசம்; திணறும் உ.பி., வனத்துறை; இன்றும் ஒரு குழந்தை பலி!
தொடரும் ஓநாய்கள் அட்டகாசம்; திணறும் உ.பி., வனத்துறை; இன்றும் ஒரு குழந்தை பலி!
ADDED : செப் 02, 2024 01:54 PM

லக்னோ: உ.பி.,யில் மனித வேட்டையாடும் மர்ம விலங்குகளை பிடிக்க, வனத்துறையினர் குழந்தைகளின் சிறுநீரில் நனைத்த வண்ணமயமான பொம்மைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் பஹ்ராச் மாவட்டம் மாஷி தாலுகாவில் வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் நுழையும் மர்ம விலங்குகள், மனித வேட்டையாடுகின்றன. சிறு குழந்தைகளை இழுத்துச்சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளன. கடந்த, 45 நாட்களில் மட்டும் ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேரைக் கொன்றுள்ளன.
தொடரும் தாக்குதல்!
மனித வேட்டை நடத்தும் மர்ம விலங்குகள், சாதாரண ஓநாய்கள் தான் என்று வனத்துறையினர் கூறினர். அவர்களும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு, நான்கு ஓநாய்களை பிடித்தனர். ஆனாலும் மனித வேட்டை நின்றபாடில்லை; விலங்குகளின் தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது.
சிறுநீரில் நனைத்த பொம்மைகள்!
இந்நிலையில், இன்று (செப்.,02) ஓநாய் தாக்கியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. மூதாட்டி ஒருவர் பலத்த காயமுற்றார். இதையடுத்து சுற்று வட்டாரத்தில் இருக்கும் 35 கிராமங்களில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், 'மனிதர்களை வேட்டையாடி வந்த ஓநாய்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விரைவில் பிடித்து விடுவோம்' என தெரிவித்தனர். ஓநாய்கள் பதுங்கியிருக்கும் ஆற்றங்கரையார பகுதிகளில் சிறு குழந்தைகள் போன்ற வண்ண பொம்மைகளை வனத்துறையினர் போட்டு வைத்துள்ளனர்.
வனத்துறை அதிகாரி சொல்வது என்ன?
இது குறித்து மூத்த வனத்துறை அதிகாரி அஜித் கூறியதாவது: குழந்தைகளின் சிறுநீரில் நனைத்த பொம்மைகள் ஆற்றங்கரைகளுக்கு அருகில் ஓநாய்கள் பதுங்கும் இடங்கள் மற்றும் புதர்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன. இயற்கையான மனித வாசனையை அவை கண்டுகொள்வதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இப்படித்தான் ஏற்கனவே 4 ஓநாய்களை பிடித்தோம்.
மீதமுள்ள ஓநாய்கள் தொடர்ந்து தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக, இரவில் வேட்டையாடிவிட்டு, அதிகாலையில் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புகின்றன. பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் அவற்றை பொறிகளுக்கு அருகில் உள்ள வெறிச்சோடிய பகுதிகளுக்கு விரட்ட முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.