காணிக்கை பணம் வேறு துறைக்கு மாற்றவில்லை கோவில்களில் போர்டு வைக்க அமைச்சர் உத்தரவு
காணிக்கை பணம் வேறு துறைக்கு மாற்றவில்லை கோவில்களில் போர்டு வைக்க அமைச்சர் உத்தரவு
ADDED : நவ 12, 2024 05:49 AM
பெங்களூரு: ''கோவிலின் பணம், வேறு துறைகளுக்கு மாற்றப்படாது என்ற வாக்குறுதி போர்டு வைக்க வேண்டும்,'' என, மாநில அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தின் முக்கியமான கோவில்களின் காணிக்கை பணம், மசூதி, தேவாலயங்களின் மேம்பாட்டுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை கண்டித்து ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
கோவிலின் காணிக்கை பணம், அந்தந்த கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். ஆனால், வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதால், அரசு தர்மசங்கடத்தில் சிக்குகிறது.
இதற்கு தீர்வு காணும் நோக்கில், அனைத்து கோவில்களிலும் 'கோவிலின் உண்டியல் பணம், கோவிலின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வேறு துறைகளுக்கு பரிமாற்றம் செய்யப்படாது' என போர்டு எழுதி வைக்கும்படி ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 36,000 கோவில்கள் உள்ளன. இவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் பெறும் கோவில்களும் உள்ளன. சாமுண்டீஸ்வரி, ஹாசனாம்பா, கொப்பாலின் ஹுலிகெம்மா, சவதத்தி எல்லம்மா, சாம்ராஜ்நகரின் மலை மஹாதேஸ்வரா உட்பட, பல கோவில்கள் அதிக வருவாய் பெறும் கோவிலாகும்.
கோவில்களுக்கு கிடைக்கும் வருவாய், அந்தந்த கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படாது. இது தொடர்பாக, துறை கட்டுப்பாட்டில் உள்ள 36,000 கோவில்களிலும், 'கோவில்களின் பணம், வேறு துறைக்கு மாற்றப்படவில்லை. கோவில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது' என, போர்டு வைக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால், அதற்காக தயாராகிறோம்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.

