'சபரிமலையில் அன்னதானத்துக்கு பணம் வசூலிக்க கூடாது'
'சபரிமலையில் அன்னதானத்துக்கு பணம் வசூலிக்க கூடாது'
ADDED : டிச 20, 2024 01:41 AM
கொச்சி,
மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் சபரிமலை வரும் பக்தர்களிடம் அன்னதானத்துக்கு பணம் வசூலிக்கக் கூடாது என, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 16ம் தேதி துவங்கியது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து சபரிமலை வந்து அய்யப்பனை தரிசித்து செல்கின்றனர்.
இந்த கோவிலை திருவிதாங்கூர் தேவசம் வாரியம் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் கீழ் செயல்படும் கோவில்களில், நடைமுறையில் உள்ள அன்னதான திட்டத்துக்கு சபரிமலை பக்தர்களிடம் இருந்த பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான மனுவை, பக்தர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில், 'மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை உள்ளிட்ட புனித யாத்திரை காலங்களில், திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் கீழ் செயல்படும் கோவில்களிலும், அதை ஒட்டிய நடைபாதைகளிலும் அன்னதானம் வழங்கும்போது, சபரிமலை செல்லும் பக்தர்களிடம் இருந்து பணம் வசூலிக்கக் கூடாது.
'அதே போல், அவர்களுக்கு கழிப்பறை, குடிநீர், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்படுவதை உறுதிசெய்ய தேவசம் வாரிய கமிஷனர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.