இடமாற்ற கோரிக்கையுடன் வராதீர்கள்! போலீசாருக்கு கமிஷனர் எச்சரிக்கை
இடமாற்ற கோரிக்கையுடன் வராதீர்கள்! போலீசாருக்கு கமிஷனர் எச்சரிக்கை
ADDED : அக் 05, 2024 05:05 AM

பெங்களூரு: ''இடமாற்றம் கேட்டு அதிகாரிகளோ, போலீசாரோ கோரிக்கை மனுவுடன் என் அலுவலகத்துக்கு வராதீர்கள். வந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்,'' என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா எச்சரித்துள்ளார்.
பெங்களூரு, ஆடுகோடியின் சி.ஏ.ஆர்., அணிவகுப்பு மைதானத்தில் நேற்று மாதாந்திர அணிவகுப்பு நேற்று நடந்தது. இதில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா பேசியதாவது:
ஆண்டின் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளோம். இப்போதும் சில போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகள் இடமாற்றம் கேட்டு கோரிக்கை மனுவை பிடித்துக் கொண்டு, என் அலுவலகத்துக்கு வருகின்றனர். பொதுமக்களை விட, இடமாற்றம் கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வருவோர் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
இடமாற்றம் ரத்து
ஏற்கனவே கவுன்சலிங் மூலம், பதவி உயர்வு, இடமாற்றம் அளிப்பது முடிந்துவிட்டது. ஆனால் சிலர் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்றம் கோரியும், கமிஷனர் அலுவலகத்துக்கு வருவது நல்லதல்ல. இதுபோன்று வருவதால், கடமையை செய்ய முடியவில்லை. ஆண்டு முடிவடைய மூன்று மாதங்கள் மட்டும் உள்ளன.
ஒருவேளை தற்போது பணியாற்றும் இடத்தில் பிரச்னைகள் இருந்து, வேறு இடத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால், கூடுதல் போலீஸ் கமிஷனர் மற்றும் துணை போலீஸ் கமிஷனரின் சிபாரிசு கடிதத்துடன், இடமாற்றம் கோரும் கடிதத்தை என் அலுவலகத்துக்கு அனுப்புங்கள்.
இடமாற்றம் அவசியம் என, தெரிந்தால் இடமாற்றம் செய்வோம். நேரடியாக கடிதத்துடன் வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாகன திருட்டு, செயின் பறிப்பு, திருட்டு வழக்குகளை கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். பொருட்களை பறிமுதல் செய்தோம். வரும் நாட்களில் மேலும் சிறப்பாக பணியாற்றி, துறைக்கு பெருமை சேருங்கள்.
பொறுமை
சமீப நாட்களில் போலீஸ் நிலையங்களுக்கு, புகார்களுடன் வரும் பொது மக்களிடம் போலீசார், பொறுமையுடன் நடந்து கொள்கின்றனர். மக்களின் பிரச்னைகளை தீர்க்கின்றனர். இனியும் இதேபோன்று நடந்து கொள்ளுங்கள்.
சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களை கவுரவிக்கிறோம். மற்றவர்களும் இப்படியே பணியாற்றுங்கள். தசரா ஆரம்பமாகியுள்ளது. தீபாவளி நெருங்குகிறது. குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.