ஓட்டு இயந்திர தரவுகளை அழிக்காதீர்கள்: சுப்ரீம் கோர்ட்
ஓட்டு இயந்திர தரவுகளை அழிக்காதீர்கள்: சுப்ரீம் கோர்ட்
ADDED : பிப் 11, 2025 11:26 PM

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின், 'மெமரி கார்டு' மற்றும் 'மைக்ரோ கன்ட்ரோலர்' ஆகியவற்றில் உள்ள தகவல்களை எவ்வாறு அகற்றுகிறீர்கள்? அது குறித்த விபரங்களை தாக்கல் செய்யுங்கள்' என, தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் மற்றும் சில அரசியல் கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், ஓட்டுப்பதிவு முடிந்த பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள மெமரி கார்டு மற்றும் மைக்ரோ கன்ட்ரோலர் ஆகிய கருவிகளில் உள்ள தரவுகள் எவ்வாறு அகற்றப்படுகின்றன என்பது குறித்து புதிய கொள்கையை உருவாக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரினர்.
மேலும், இத்தகைய தரவுகள் அகற்றப்படுவதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பதை பொறியாளர்கள் உதவியுடன் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரினர்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 'இப்போதைக்கு எந்த ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் இருந்தும் தரவுகளை அகற்ற வேண்டாம். இந்த தரவுகளை அகற்றுவதில் எத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்ற விபரங்களை தாக்கல் செய்யுங்கள்' என, உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17க்கு ஒத்திவைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -