சந்தைகள், பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்: ராஜஸ்தான் மக்களுக்கு அறிவிப்பு
சந்தைகள், பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்: ராஜஸ்தான் மக்களுக்கு அறிவிப்பு
ADDED : மே 10, 2025 03:23 PM

பார்மர்: போர் பதற்றம் காரணமாக சந்தைகளுக்கோ அல்லது பொது இடங்களுக்கோ மக்கள் செல்ல வேண்டாம் என்று ராஜஸ்தான் மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இதன் காரணமாக, எல்லையோர மாவட்டங்களில் இரவு நேரங்களில் மின் விளக்குகளை அணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டம், உயர்சிவப்பு எச்சரிக்கை என்ற கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.
அம்மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளின் பாகங்கள், சிதைவுகள் ஆகியவை பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் கருதி அம்மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து தரப்பு மக்களும் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்று கலெக்டர் டினா டாபி அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது; பார்மர் மாவட்டம் அதி சிவப்பு எச்சரிக்கை என்ற கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே மக்கள் சந்தைகளுக்கோ அல்லது பொதுவான இடங்களுக்கோ செல்ல வேண்டாம். வெளியே யாரும் செல்லவேண்டாம், வீடுகளுக்குள் இருங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.