தாத்தா சொல்லை தட்டாதே : பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை
தாத்தா சொல்லை தட்டாதே : பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை
UPDATED : மே 23, 2024 06:49 PM
ADDED : மே 23, 2024 06:39 PM

பெங்களூரு: தாத்தாவின் கோபத்திற்கு ஆளாகாமல் பிரஜ்வல்ரேவண்ணா போலீசில் சரணடைய வேண்டும் என பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவரது வீட்டில் பணியாற்றிய 47 வயதுள்ள பெண், ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் தன்னை பலாத்காரம் செய்ததாக, ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், ஏப்ரல் 28ம் தேதி புகார் அளித்திருந்தார்.
தலைமறைவு
தந்தை, மகன் மீது பலாத்கார வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரணை செய்ததில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாக பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கர்நாடகா சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டு பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது,
பொறுமையை சோதிக்காதே
பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக நாடு திரும்பி வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். சிறப்பு விசாரணைக்குழு விசாரணையில் நானோ எனது குடும்பத்தினரோ எந்த வகையிலும் தலையிட மாட்டோம். தாத்தாவின் பொறுமையை சோதிக்காமல் பிரஜ்வல் ரேவண்னா நாடு திரும்பி சட்டத்திற்கு கீழ் படிய வேண்டும்.
எனது எச்சரிக்கையை அலட்சியம் செய்தால் எனது கோபத்திற்கு ஆளாக நேரிடும். என் மீது கொஞ்சமாவது மதிப்பு இருந்தால் உடனே திரும்பி வர வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

