ADDED : ஜன 24, 2025 08:08 PM
புதுடில்லி:“உங்கள் ஓட்டு விலைமதிப்பற்றது. அதை, 1,100 ரூபாய்க்கு விற்காதீர்கள்,” என, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைபாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
தங்கச் சங்கிலி, புடவை, காலணி மற்றும் 1,100 ரூபாய் பணம் ஆகியவற்றை வாக்காளர்களுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் வினியோகம் செய்கின்றனர். பணம் மற்றும் பரிசுகள் மூலம் ஆம் ஆத்மியின் ஓட்டுக்களை திசை திருப்பும் வேலையை பா.ஜ., செய்து வருகிறது.
பா.ஜ., வேட்பாளர்கள் வழங்குவது மக்களின் பணம்தான். உங்கள் 1,100 ரூபாய் பணத்துக்கோ அல்லது ஒரு புடவைக்கோ விற்காதீர்கள். உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது. டில்லி மக்கள் ஜனநாயகத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வாக்குரிமையைப் பாதுகாக்க அம்பேத்கர் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து பாருங்கள். அம்பேத்கர், 'ஓட்டுக்களை விலைக்கு வாங்க முடிந்தால் அதனால் நம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும். பணக்காரர்களின் ஆட்சிதான் நடக்கும். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள்; ஆனால், உங்கள் ஓட்டுரிமையை விற்று விடாதீர்கள்' என்றார். அம்பேத்கரின் இந்த வார்த்தைகளை டில்லி மக்கள் மறந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

