டில்லியில் அதிகாலை நடைபயிற்சி வேண்டாம்: சந்திரசூட் அறிவுரை
டில்லியில் அதிகாலை நடைபயிற்சி வேண்டாம்: சந்திரசூட் அறிவுரை
ADDED : அக் 25, 2024 02:57 AM

புதுடில்லி: காற்று மாசுபாட்டால் டில்லி ஸ்தம்பித்து விட்டதால், இனி அதிகாலை நடைபயிற்சியை மக்கள் தவிர்ப்பது நல்லது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.
தலைநகர் டில்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாட்டில் தலைநகரே ஸ்தம்பித்து கிடக்கிறது.
இந்த காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக, அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெல் உமிகளை விவசாயிகள் எரிப்பது தான். எனவே, இதனை தடுக்க பெயரளவு நடவடிக்கைகளை மட்டுமே இரு மாநில அரசுகளும் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மரக்கட்டைகளை எரிப்பவர்களுக்கும், அதை மீறுபவர்களுக்கும் ஏன் பெயரளவு அபராதம் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மாசுபாட்டை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளில் அரசுகளின் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது, டில்லியில் தினமும் அதிகாலை 4 மணி முதல் 4:15 மணிவரை நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். இன்று முதல் நிறுத்தி விட்டேன். காரணம் நகரில் காற்று மாசு அதிகரித்துவிட்டதால் சுவாசப்பிரச்னை ஏற்படும் என டாக்டர்கள் எனக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
எனவே இனி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்ப்பதே நல்லது. அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்றார்

