'நீதிமன்றத்தில் எனர்ஜியை வீணடிக்காதீங்க'; அஜித் - சரத் பவாருக்கு நீதிபதிகள் அட்வைஸ்
'நீதிமன்றத்தில் எனர்ஜியை வீணடிக்காதீங்க'; அஜித் - சரத் பவாருக்கு நீதிபதிகள் அட்வைஸ்
ADDED : நவ 07, 2024 06:13 AM
புதுடில்லி : 'கடிகாரம்' சின்னத்துக்காக நீதிமன்றத்தில், 'எனர்ஜி'யை வீணாக்காமல், வாக்காளர்களை கவருவதில் கவனம் செலுத்துங்கள் என அஜித் பவார், சரத் பவார் அணியினருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
மஹாராஷ்டிராவில் செயல்படும் சரத் பவாரின் தேசியவாத காங்., 2023 ஜூலையில் பிளவுபட்டது. அவரது உறவினர் அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன், ஆளும் சிவசேனா - பா.ஜ., கூட்டணி அரசுக்கு ஆதரவளித்தார். தொடர்ந்து அஜித் துணை முதல்வரானார்.
தேசியவாத காங்., பெயர் மற்றும் கட்சியின், 'கடிகாரம்' சின்னத்தை, அஜித் பவார் தரப்புக்கு தேர்தல் கமிஷன் வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சரத் பவார் தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். லோக்சபா தேர்தலில், 'கடிகாரம் சின்னம் ஒதுக்கீடு விவகாரம், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது' என, நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடும்படி, அஜித் பவார் தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20ல் தேர்தல் நடக்கிறது. ஆளும் 'மஹாயுதி' கூட்டணியின் அங்கமாக அஜித் பவார் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி சார்பில், சரத் பவார் தரப்பு களமிறங்குகிறது. சட்டசபை தேர்தலில் கடிகாரம் சின்னத்தை அஜித் பவார் பயன்படுத்த தடை விதிக்கும்படி, சரத் பவார் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அக்., 24ல் இதை விசாரித்த நீதிமன்றம், 'தேசியவாத காங்கிரசின் கடிகாரம் சின்னம் ஒதுக்கீடு, நீதித்துறை விசாரணைக்கு உட்பட்டது' என, ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடும்படி, அஜித் பவார் தரப்புக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், திபங்கர் தத்தா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அஜித் பவார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங் கூறுகையில், ''வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து விட்டனர். அதற்கான காலக்கெடுவும் முடிந்து விட்டது. சரத் பவார் அணியினர் வேண்டுமென்றே முழு தேர்தல் செயல்முறையையும் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்,'' என்றார்.
இதற்கு பதிலளித்த சரத் பவார் தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ''உச்ச நீதிமன்றத்தின் மார்ச் 19ம் தேதி உத்தரவுப்படி, போஸ்டர், துண்டு பிரசுரம், ஆடியோ - விளம்பரங்களில், அஜித் பவார் தரப்பு பொறுப்பு துறப்பு செய்தியை வெளியிட வேண்டும். ஆனால் அது கடைபிடிக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு புதிய சின்னத்தை வழங்க வேண்டும்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதிகள் கூறியதாவது:
கடிகாரம் சின்னம் ஒதுக்கீடு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக, மராத்தி உள்ளிட்ட நாளிதழ்களில், அஜித் பவார் தரப்பினர், 36 மணி நேரங்களுக்குள் மறுப்பு செய்தி வெளியிட வேண்டும். சின்னம் தொடர்பாக, இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் எனர்ஜியை வீணடிக்க வேண்டாம். அதற்கு பதில் வாக்காளர்களை எப்படி கவரலாம் என்பதில் கவனம் செலுத்தலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.