'வீட்டு வாசற்படி சேவை திட்டம்' நனவானது; கேரள மாநில அமைச்சர் பெருமிதம்
'வீட்டு வாசற்படி சேவை திட்டம்' நனவானது; கேரள மாநில அமைச்சர் பெருமிதம்
ADDED : அக் 12, 2025 10:08 PM

பாலக்காடு; விவசாயிகள், பால் பண்ணையாளர்களின் கோரிக்கையான, 'வீட்டு வாசற்படி சேவை திட்டம்' நனவாகியுள்ளது, என, கேரள பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் சிஞ்சுராணி தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தேங்குறுச்சியில் இரு நாட்கள் நடந்த பால் பண்ணையாளர்கள் சங்கம விழாவின் நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சியை, காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்து, பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் சிஞ்சுராணி பேசியதாவது:
பால் விவசாயிகளுக்கு உதவ அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் மிகப்பெரிய பால் உற்பத்தி மாவட்டமான பாலக்காடு, பால் உற்பத்தித் துறையில் புரட்சிகரமான முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
பாலக்காடு மாவட்டத்தில், தற்போது, தினமும் சுமார், 3.3 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
பால் பண்ணையாளர்களின் நீண்ட கோரிக்கையான, ஊக்கத்தொகை மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வீடு தேடி வந்து வழங்கும், 'வீட்டு வாசற்படி சேவை திட்டம்' நனவாகியுள்ளது.
பால்வள மேம்பாட்டுத் துறையின் திட்டங்கள் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பாலக்காடு மாவட்டத்தில் பால்வளத் துறைக்கு ஊக்கத்தொகையாக, ரூ.10.6 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, பேசினார்.
நிகழ்ச்சியில் ஆலத்தூர் எம்.எல்.ஏ., பிரசேனன் தலைமை வகித்தார். பல்வேறு பிரிவில் சிறந்த பால் பணியாளர்களுக்கான விருதுகளை ஆலத்தூர் எம்.பி., ராதாகிருஷ்ணன் வழங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் சாந்தகுமாரி, பிரேம்குமார், கேரள பீட்ஸ் தலைவர் ஸ்ரீகுமார், பால்வளத்துறை இயக்குனர் ஷாலினி, மாவட்டம் ஊராட்சி தலைவர் பினு மோள் ஆகியோர் கலந்து கொண்டனர்.