இந்தியா முழுவதும் 'டபுள் டெக்கர்' பஸ்; கேரள அமைச்சர் சட்டசபையில் பெருமிதம்
இந்தியா முழுவதும் 'டபுள் டெக்கர்' பஸ்; கேரள அமைச்சர் சட்டசபையில் பெருமிதம்
ADDED : மார் 18, 2025 01:28 AM

மூணாறு; மூணாறில் இயக்கப்படும் 'டபுள் டெக்கர்' பஸ்சின் அலை இந்திய முழுவதும் வீசுவதாக கேரள சட்ட சபையில் போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் தெரிவித்தார்.
மூணாறின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ' ராயல் வியூ' எனும் திட்டத்தில் ' டபுள் டெக்கர்' பஸ் சேவை பிப்.,8ல் பயன்பாட்டுக்கு வந்தது. பஸ் சுற்றிலும், கூரையும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்டதால், அதில் சுற்றுலா பயணிகள் பயணித்தவாறு வெளிப்புற காட்சிகளை ரசிக்கலாம். அந்த புதுவிதமான அனுபவத்தை ரசிப்பதற்கு டபுள் டெக்கர் பஸ்சில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டபுள் டெக்கர் பஸ் குறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ் குமார் சட்டசபையில் கூறியதாவது: மூணாறில் டபுள் டெக்கர் பஸ் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. அதனை நான் 'டிசைன்' செய்த போதும், கேரள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மிகவும் திறமையாக வடிவமைத்தனர். ரூ.40 லட்சம் செலவானபோதும், அதனால் எவ்வித நஷ்டமும் இல்லை. ஒரு நாளைக்கு ரூ.56 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. செலவு ரூ.13 ஆயிரம் மட்டும் ஆகிறது.
இந்தியா முழுவதும் டபுள் டெக்கர் பஸ் அலை வீசுவதால், அதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பயணித்து வருகின்றனர். பஸ்சுக்கு முடக்கிய ரூ.40 லட்சத்தை வரும் இரண்டு மாதங்களில் ஈடு செய்ய முடியும் என்றார்.