ADDED : பிப் 08, 2024 05:32 AM
பெங்களூரு: பரபரப்பு மிகுந்த பெங்களூரு கும்பார்பேட்டையில், சமையல் உபகரணங்கள் விற்கும் கடையில் நேற்றிரவு இரட்டை கொலை நடந்துள்ளது.
பெங்களூரு கும்பார்பேட்டையில்,ஹரி மார்கெட்டிங் என்ற சமையல் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
வழக்கம் போல் இந்த கடையின் உரிமையாளர் சுரேஷ், 55, நேற்று கடையில் இருந்தார். இரவில் அவரது நெருங்கிய நண்பர் மகேந்திரா, 68, வந்துள்ளார்.
இரவு 8:30 மணி அளவில், திடீரென கடைக்குள் புகுந்த ஒருவர், சுரேஷை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தடுக்க முற்பட்ட நண்பரையும் கொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கை ரேகை நிபுணர்கள், தடயங்களை ஆய்வு செய்தனர். இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின், மத்திய மண்டல துணை கமிஷனர் சேகர் கூறுகையில், ''சொத்து தகராறு காரணமாக துாரத்து உறவினரே கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பத்ரா என்ற கொலையாளியை கைது செய்துள்ளோம்,'' என்றார்.
பரபரப்பு மிகுந்த பகுதியில், இரட்டை கொலை நடந்திருப்பது, அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹலசூரு கேட் போலீசார் விசாரிக்கின்றனர்.

