வயல்களில் பயிர்க்கழிவுகளை எரித்தால் அபராதம் இரட்டிப்பு
வயல்களில் பயிர்க்கழிவுகளை எரித்தால் அபராதம் இரட்டிப்பு
ADDED : நவ 07, 2024 10:30 PM
புதுடில்லி:அறுவடை வயல்களில் பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கான அபராதம் இனி இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில், தங்கள் அறுவடை வயல்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பதை விவசாயிகள் காலங்காலமாக செய்து வருகின்றனர்.
இதற்கு விவசாயிகள் எரிப்பதற்கு நெல், கோதுமை பயிர் முறை, இயந்திரம் மூலம் அறுவடை செய்தல், அறுவடைக்குப் பின் வயலிலேயே எச்சங்களை விடுவது, தொழிலாளர் பற்றாக்குறை, பயிர் எச்சங்களுக்கு சாத்தியமான சந்தை இல்லாதது ஆகியவை முக்கிய காரணிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
தற்போது விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் மேற்கண்ட காரணிகளால் வயல்களை எரிப்பதை அவர்கள் முழுமையாக கைவிடவில்லை.
இந்நிலையில் வழக்கம்போல் இந்த ஆண்டு தீபாவளி முடிந்த வாரத்தில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 2020 முதல் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தீபாவளி வேளையில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
இந்தத் தடையை மீறி இந்த ஆண்டு பட்டாசு வெடிக்கப்பட்டதே காற்று கடுமையாக மாசடைய காரணம். இதுதொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், டில்லி காவல் துறையையும் அண்டை மாநில அரசுகளையும் கடுமையாக கண்டித்தது.
அத்துடன் கடந்த 10 நாட்களில் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் எந்தெந்த இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இரு மாநில அரசுகளும் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, டில்லி - என்.சி.ஆர்., பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பயிர் எச்சங்களை எரிக்கும் விவசாயிகளுக்கான அபராதத் தொகையை மத்திய அரசு இரட்டிப்பாக்கியுள்ளது.
இதன்படி, ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இனி 30,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்குப்போரிடம் 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அபராதம் வசூலிக்கப்படும்.
இரண்டு ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக இதுவரை 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இது 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.