ஆன்லைன் மோசடி தடுப்பு செயலியை பதிவிறக்குவது கட்டாயமல்ல! விரும்பினால் நீக்கலாம் என அமைச்சர் விளக்கம்
ஆன்லைன் மோசடி தடுப்பு செயலியை பதிவிறக்குவது கட்டாயமல்ல! விரும்பினால் நீக்கலாம் என அமைச்சர் விளக்கம்
ADDED : டிச 03, 2025 05:03 AM

புதுடில்லி,: “ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்கான, 'சஞ்சார் சாத்தி' செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் அல்ல; மற்ற செயலிகளை போல தேவையில்லை என பயனாளர்கள் நினைத்தால் அதை நீக்கிவிடலாம்,” என, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.
திருடு போகும், 'மொபைல் போன்'களை கண்டறிவதற்கும், 'ஆன்லைன்' மோசடிகளை தவிர்ப்பதற்கும், 'சஞ்சார் சாத்தி' என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
'புதிதாக தயாரிக்கப்படும் மொபைல் போன்களில் இந்த செயலியை முன்பே நிறுவி இருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களில், 90 நாட்களுக்குள் நிறுவ வேண்டும்' என, மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தி இருந்தது.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய மொபைல் போன்களிலும் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் செயலியை பதிவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
சுற்றறிக்கை
இது தொடர்பாக கடந்த வாரம் மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், மொபைல் போன்களின் பயன்பாட்டின்போது இந்த செயலி எளிதில் காணக்கூடியதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்; செயலியின் செயல்பாடுகளை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்நிலையில், குடிமக்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கிறது என காங்., குற்றஞ்சாட்டியது.
மேலும், மக்களை உளவு பார்க்கவே இந்த செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக விமர்சித்தது.
பார்லி., வளாகத்துக்கு வெளியே நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:
பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே இந்த செயலியை அரசு உருவாக்கியுள்ளது. இந்த செயலியை மொபைல் போன்களில் வைத்திருப்பதும்; நீக்குவதும் பயனாளர்களின் விருப்பம். மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.
'சஞ்சார் சாத்தி' செயலியை, 1.50 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் திருடு போன, 20 லட்சம் மொபைல் போன்கள் எங்கு இருக்கின்றன என்ற தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.
அதை வைத்து, தோராயமாக 7.50 லட்சம் மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த செயலி மூலம் அழைப்புகளை ஒட்டுக் கேட்கவோ, உளவு பார்க்கவோ முடியாது.
செயலியின் முழு கட்டுப்பாடும் பயனாளர்களிடமே இருக்கும். எனவே, ஒரு பயனர் விரும்பினால், எந்த நேரத்திலும், அந்த செயலியை மொபைல் போனில் இருந்து நீக்கலாம்.
போலி செய்தி
மக்களின் நலனுக்காக இந்த செயலியை அறிமுகம் செய்வது அரசின் கடமை. மற்ற செயலிகளை போலவே இந்த செயலியையும் நினைத்தபோது நீக்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அமித் மாள்வியா கூறுகையில், “சஞ்சார் சாத்தி செயலி குறித்து போலியான செய்திகள் உலவுகின்றன.
“இது உளவு பார்க்கும் கருவி அல்ல. மொபைல் போனில் இருக்கும் குறுஞ்செய்திகள், அழைப்புகள், தனிப்பட்ட தரவுகளை இந்த செயலி கட்டுப்படுத்தாது. விரிவான தொலைதொடர்பு பாதுகாப்புக்காகவே இந்த செயலி கட்டமைக்கப்பட்டு உள்ளது,” என்றார்.

