ADDED : பிப் 05, 2025 06:41 AM
வசந்த்நகர்: வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
பெங்களூரு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரேகா, 29. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இதனால் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்தார். கணவர் இறந்த விபத்து தொடர்பான வழக்கு, இந்திராநகர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. விசாரணைக்காக அடிக்கடி போலீஸ் நிலையம் சென்றபோது ரேகாவுக்கும், போலீஸ்காரர் மனோஜ், 32, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
கடந்த ஆண்டு மைசூரின் நஞ்சன்கூடில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பெங்களூரு வயாலிகாவலில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். வசந்த் நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் ரேகாவும், மனோஜும் வசித்தனர். கடந்த சில மாதங்களாக, வரதட்சணை கேட்டு ரேகாவை, மனோஜ் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
'உனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். உனக்கு பதிலாக வேறு யாரையாவது நான் திருமணம் செய்து இருந்தால், அதிக வரதட்சணை கிடைத்து இருக்கும்' என்று கூறி மனதளவில் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த ரேகா, மனோஜ் மீது ஐகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். மனோஜ் மீது வழக்குப் பதிவானது. விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.