லோக்சபா தேர்தல் சீட்டுக்காக அரசு பணியை துறந்த டாக்டர்
லோக்சபா தேர்தல் சீட்டுக்காக அரசு பணியை துறந்த டாக்டர்
ADDED : ஜன 07, 2024 02:38 AM
பெங்களூரு, : லோக்சபா தேர்தலில் போட்டியிடும் நோக்கில், டாக்டர் ஒருவர், அரசு பணியை துறந்துள்ளார். பா.ஜ., சீட் எதிர்பார்க்கிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், சீட் எதிர்பார்ப்போரின் 'லாபி' அதிகரிக்கிறது. அந்தந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட, ஆவலாக காத்திருக்கின்றனர். டாக்டர் ஒருவர் லோக்சபா தேர்தலுக்காக, அரசு பணியை ராஜினாமா செய்துள்ளார்.
பெங்களூரின், சஞ்சய் காந்தி மருத்துவமனையில், முதுகு வலி தொடர்பான சிகிச்சை வல்லுனராக பணியாற்றுபவர் டாக்டர் மோகன். இவர் சாம்ராஜ்நகர் தொகுதி பா.ஜ., எம்.பி., சீனிவாச பிரசாதின் மருமகன்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட சீனிவாச பிரசாதுக்கு விருப்பம் இருக்கவில்லை. வேறு வேட்பாளர்கள் இல்லாததால், பா.ஜ., மேலிடம் நெருக்கடி கொடுத்து களமிறக்கியது.
அவர் வெற்றியும் பெற்றார். வயது மற்றும் உடல் ஆரோக்கியமின்மை காரணமாக, இம்முறை போட்டியிடுவது இல்லை என, கூறி அரசியல் ஓய்வு அறிவித்துள்ளார். அவர் சில மாதங்களுக்கு முன்பே இதைக் கூறிவிட்டார்.
சீனிவாச பிரசாத் போட்டியில் இருந்து விலகியதால், சாம்ராஜ்நகர் தொகுதியில் பலர் சீட் எதிர்பார்க்கின்றனர். இவரது மருமகன் டாக்டர் மோகனும், அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலில் குதித்துள்ளார்.
அரசு டாக்டராக பணியில் அமர்ந்து, 15 ஆண்டுகளாகின்றன. மருத்துவ துறையில், மேலும் உயர்ந்த பதவிக்கு செல்ல, அதிக வாய்ப்பிருந்தது. ஆனால் அரசியல் மீதான ஆர்வத்தால், லட்சக்கணக்கான ரூபாய் ஊதியம் கிடைத்த அரசு பணியை உதறிவிட்டு, லோக்சபா தேர்தலுக்கு தயாராகிறார்.