ADDED : ஆக 01, 2025 12:13 AM

புதுடில்லி:பீஹாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. பெயர் விடுபட்ட தகுதிவாய்ந்த வாக்காளர்கள், செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், வரும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பீஹார் முழுதும் கடந்த ஒரு மாதமாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தன.
இதன்படி, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் அடையாளங்களை தேர்தல் கமிஷன் ஊழியர்கள் சரிபார்த்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடின. எனினும், நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.
சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, 7 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 30 லட்சம் பேர் வேறு மாநிலங்களுக்கு நிரந்தரமாக குடியேறி, அங்கு வாக்காளர்களாக பதிவு செய்ததும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், பீஹாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. இதில், 65 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற மாட்டார்கள் என தெரிகிறது.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நேற்று கூறுகையில், “பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதிவாய்ந்த வாக்காளர்கள், அந்தந்த மாவட்ட தேர்தல் பதிவு அதிகாரியிடம் செப்., 1 வரை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தகுதிவாய்ந்த வாக்காளர்கள் விடுபட்டிருந்தால் அரசியல் கட்சிகளும் முறையிடலாம்,” என்றார்.