சீக்கியர் பத்தி தப்பா பேசினா கூண்டில் ஏத்திவிடுவோம்! ராகுலுக்கு பா.ஜ., 'நச்' பதிலடி
சீக்கியர் பத்தி தப்பா பேசினா கூண்டில் ஏத்திவிடுவோம்! ராகுலுக்கு பா.ஜ., 'நச்' பதிலடி
ADDED : செப் 11, 2024 07:41 AM

புதுடில்லி; சீக்கியர்கள் பற்றி தவறாக பேசினால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்று பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. சிங் எச்சரித்துள்ளார்.
விமர்சனம்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மத்திய அரசு பற்றியும் பிரதமர் மோடி குறித்தும் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். அவரின் கருத்துகளுக்கு ஆளும் பா.ஜ., தரப்பில் கடும் பதிலடி தரப்பட்டு வருகிறது.
தலைப்பாகை
அண்மையில் வெர்ஜினியாவில் பேசிய ராகுல், சீக்கியர்கள் பற்றியும் அவர்கள் தலைப்பாகை பற்றியும் குறிப்பிட்டார். இந்தியாவில் நடக்கும் போர் என்பது சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா, மாட்டார்களா என்பதை பற்றியது என்றார். அவரின் இந்த பேச்சு சீக்கியர்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது.
காங்கிரஸ்
இந்நிலையில் ராகுலின் கருத்துக்கு பா.ஜ., கடும் எதிர்வினையாற்றி இருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆர்.பி. சிங் கூறி உள்ளதாவது; டில்லியில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தலைப்பாகை அகற்றப்பட்டு, தலைமுடி வெட்டப்பட்டது. இதெல்லாம் நிகழ்ந்தது காங்கிரஸ் ஆட்சியில்.
கோர்ட்
ஆனால் அதை பற்றி எல்லாம் கூறாமல் சீக்கியர்கள் பற்றி தவறாக பேசுகிறார். அவருக்கு நான் சவால் விடுக்கிறேன், இதேபோன்று இந்தியாவில் பேசமுடியுமா? அப்படி ஏதேனும் பேசினால் வழக்கு தொடர்ந்து கோர்ட் வரை இழுப்பேன். இவ்வாறு ஆர்.பி. சிங் கூறினார்.
பொறுப்பு
மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது பொறுப்புள்ள பதவி. அந்த பதவில் இருக்கும் ராகுல் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். வெளிநாடுகளில் பேசும் போது தாய்நாட்டை பற்றி அவதூறாக பேசி நாட்டின் நன்திப்பை சிதைக்கக்கூடாது. ஆனால் ராகுல் தொடர்ந்து அதை செய்து வருகிறார் என்று கண்டித்தார்.
பேசியது சரி
அமெரிக்க சுற்றுப்பயணத்தின் ராகுல் பேசுவதை கடுமையாக பா.ஜ., விமர்சித்து வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி., சத்ருகன் சின்ஹா கூறுகையில், பா.ஜ.,வில் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு விமர்சனத்தை முன்வைத்துக் கொண்டே இருப்பார்கள். என்னை பொறுத்த வரையில் ராகுல் பேசியது சரி என்று கூறுவேன் என்றார்.