ADDED : அக் 25, 2024 10:56 PM

உடுப்பி: 'ஸ்லோ பாய்சன்' கொடுத்து, கணவரை கொலை செய்த மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.
உடுப்பி மாவட்டம், கார்கலாவின் அஜெகாரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ண பூஜாரி, 44. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரதிமா, 32, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன், பாலகிருஷ்ணாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வாந்தி, காய்ச்சலால் அவதிப்பட்டார்.
கணவருக்கு மஞ்சள் காமாலை உள்ளதாக கூறி, கார்கலாவின் தனியார் மருத்துவமனையில் பிரதிமா சேர்த்தார். மங்களூரின் வென்லாக் மருத்துவமனை, பெங்களூரின் நிமான்ஸ், விக்டோரியா மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இம்மாதம் 20ம் தேதி உயிரிழந்தார்.
இவரது இறப்பில் பிரதிமாவின் சகோதரர் சந்தீப்புக்கும், பாலகிருஷ்ண பூஜாரியின் சகோதரர் ராமகிருஷ்ணாவுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அஜெகாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணையில் இறங்கியபோது, பாலகிருஷ்ணா மனைவியின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடம் அளித்தது. அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, கணவரை கொன்றது தெரிந்தது.
விசாரணையில் வெளியான தகவல்கள்:
பிரதிமாவுக்கு, 'ரீல்ஸ்' செய்வதில் ஆர்வம் அதிகம். தன் கணவருடன் பலவந்தமாக ரீல்ஸ் செய்தார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் திலீப் ஹெக்டே, 30, என்பவர் அறிமுகமானார். இது கள்ளத்தொடர்பாக மாறியது; இதை பாலகிருஷ்ணா கண்டித்தார்.
இதனால் அவரை கொல்ல பிரதிமா திட்டமிட்டார். உணவில், 'ஸ்லோ பாய்சன்' கலந்து அவருக்கு கொடுத்து வந்தார். இதனால் அவரது உடல்நலன் பாதிக்கப்பட்டது. வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்த்து நாடகமாடினார்.
டாக்டர்கள் கைவிரித்ததும் வீட்டுக்கு அழைத்து வந்தார். இம்மாதம் 20ம் தேதி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெட்ஷீட்டால் கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை, விசாரணையில் ஒப்புக்கொண்டனர். பிரதிமா, திலீப் ஹெக்டே கைது செய்யப்பட்டனர்.