அடுத்தடுத்து கோளாறில் சிக்கும் 'ட்ரீம் லைனர்' விமானங்கள்
அடுத்தடுத்து கோளாறில் சிக்கும் 'ட்ரீம் லைனர்' விமானங்கள்
ADDED : ஜூன் 16, 2025 11:52 PM
புதுடில்லி : தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 'போயிங் 787 - -8 ட்ரீம்லைனர்' விமானங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படுவது பயணியரை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து, 'ஏர் இந்தியா' நிறுவனம் இயக்கும், போயிங் 787- - 8 ரகத்தை சேர்ந்த ஒன்பது விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது.
உத்தரவு
'ஹைட்ராலிக்' சோதனை, மின்னணு கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகளை, 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட, 'பிரிட்டிஷ் ஏர்வேஸ் ட்ரீம்லைனர்' விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சென்னை கிளம்பிய பி.ஏ., 35 விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திர கோளாறு ஏற்பட்டது. இரண்டு மணி நேரம் வானில் பறந்த நிலையில், கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.
பின் வானில் வட்ட மடித்துக் கொண்டிருந்த அந்த விமானம், லண்டனுக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த விமானம் சென்னைக்கு நேற்று அதிகாலை 3:30 மணிக்கு வந்து சேர வேண்டிய நிலையில் பயண சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனால் சென்னையிலிருந்து லண்டன் செல்ல இருந்தவர்களும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, 700 பயணியர் அவதிக்குள்ளாகினர்.
இதைத்தொடர்ந்து, ஹாங்காங்கில் இருந்து டில்லிக்கு நேற்று வர இருந்த ஏர் இந்தியா விமானமும் பாதி வழியிலேயே திரும்பியுள்ளது.
ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787- - 8 ட்ரீம்லைனர் விமானம் ஏ.ஐ., 315, ஹாங்காங்கில் இருந்து டில்லிக்கு நேற்று காலை 9:30 மணிக்கு புறப்பட்டது.
இடையூறு
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்த விமானி, உடனடியாக விமானத்தை ஹாங்காங்கில் தரையிறக்க அனுமதி கேட்டார்.
அனுமதி கிடைத்தவுடன், புறப்பட்ட 90 நிமிடத்திற்குள்ளேயே, விமானம் ஹாங்காங்கில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டன.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுள்ள இடையூறுகளால், பயணியர் சிரமமின்றி பயணம் செய்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.