பொது இடத்துக்கு இப்படியா வருவது... பெங்களூருவில் ஆடை சர்ச்சை; பற்றி எரியும் சமூக வலைதளம்!
பொது இடத்துக்கு இப்படியா வருவது... பெங்களூருவில் ஆடை சர்ச்சை; பற்றி எரியும் சமூக வலைதளம்!
ADDED : செப் 13, 2024 08:43 AM

பெங்களூரு; கர்நாடகாவில், ஷார்ட்ஸ் அணிந்து வந்த பெண்ணிடம், இதுபோன்ற ஆடைகளை பொது இடங்களில் அணியக் கூடாது என்று இன்னொரு பெண் வாக்குவாதம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.
வைரல் வீடியோ
இன்ஸ்டாகிராமில் பிரபலமான யோகா பெண் பயிற்றுநர் டேனி பட்டாச்சார்ஜி, கடந்த 8ம் தேதி ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், சேலை அணிந்தருந்த பெண் ஒருவர் 'ஷார்ட்ஸ்' அணியக் கூடாது என்று டேனியிடம் கன்னட மொழியில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த வீடியோவில், 'பெங்களூரூவில் பொது இடங்களில் ஷார்ட்ஸ் அணிய அனுமதியில்லையா' என்று டேனி கேள்வி எழுப்புகிறார். மேலும், 'ஷார்ட்ஸ் அணிவதால் என்ன பிரச்னை என்றும், இங்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
விவாதம்
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், ஏராளமானோர் அந்தப் பெண்ணுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஷார்ட்ஸ் அணிவதால் சமூதாயத்தில் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்றும், மலிவான மக்களிடம் மலிவான மனநிலை இருப்பதாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர். மற்றொருவரோ, பெங்களூரு பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்
அதேவேளையில், யோகா பெண் பயிற்றுநர் டேனி பட்டாச்சார்ஜி அந்தப் பெண்ணை அவமதித்து விட்டதாகவும், அது ஒரு ரீல்ஸ்க்காக எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன.
விளக்கம்
இதற்கிடையில், இந்த அறிக்கைகளுக்கு பதிலளித்த பட்டாச்சார்ஜி, அந்தப் பெண்ணை நான் தவிர்த்து சென்றிருக்கலாம். ஆரம்பத்தில் இதனை கண்டுகொள்ளாமல் நான் பார்க்கிங்கிற்கு சென்றேன். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து என்னிடம் வாக்குவாதம் செய்தார். மற்ற கார்களை நிறுத்தி, எனது ஷார்ட்டை காட்டி பேசிக் கொண்டிருந்தார். இருந்தும், நான் அதனை கடந்து சென்றேன். ஆனால், அந்தப் பெண் விடாமல் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார், எனக் குறிப்பிட்டுள்ளார்.

