ADDED : ஜன 19, 2025 06:59 AM
ஜிகனி: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், லாரி டிரைவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.
பெங்களூரு ரூரல் ஜிகனி அருகே ராஜாபூர் கிராமத்தில் வசித்தவர் ஜெகதீஷ், 42. லாரி டிரைவர். இவர், தினமும் இரவு தன் நண்பர்களுடன் சேர்ந்து, காலி நிலத்தில் மது அருந்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் மாலையில், வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெகதீஷ், இரவில் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ஜெகதீஷை தேடினர். அவர் கிடைக்கவில்லை.
அவருடன் சேர்ந்து, தினமும் மது அருந்தும் நண்பர்களிடம் சென்று குடும்பத்தினர் கேட்டனர். அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.
நேற்று காலை ராஜாபூர் கிராமத்தில் உள்ள பாழடைந்த வீட்டின் முன் ஜெகதீஷ் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். ஜிகனி போலீசார் நடத்திய விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரிந்தது.
அந்த இடத்தில் மது பாட்டில்கள் கிடந்ததால் குடிபோதை தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை. ஜெகதீஷின் நண்பர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.