வாக்குவாதத்தில் இருவர் கொலை டிரைவருக்கு ஆயுள் தண்டனை
வாக்குவாதத்தில் இருவர் கொலை டிரைவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : டிச 15, 2024 10:54 PM
மைசூரு: சிறு பிரச்னைக்காக ஏற்பட்ட தகராறில், இருவரை கொன்ற ஆட்டோ ஓட்டுனருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, மைசூரு ஐந்தாவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடப்பாண்டு மே 24ம் தேதி மைசூரு எச்.டி.,கோட்டே சாலையில் கொடிகேஹுந்தி கிராமம் அருகில் ஆட்டோவும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதனால் இரு வாகன ஓட்டிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சரக்கு வாகன ஓட்டுனருக்கு ஆதரவாக அதே வாகனத்தில் பயணித்தவரும் சேர்ந்து, ஆட்டோ ஓட்டுனரிடம் சண்டையிட்டனர்.
கோபமடைந்த ஆட்டோ ஓட்டுனர் யோகேஷ், தன்னிடம் இருந்த கத்தியால், சரக்கு வாகன ஓட்டுனர் டி.மஞ்சுநாத் மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த ஆர்.மஞ்சுநாத் ஆகிய இருவரையும் குத்தினார். படுகாயமடைந்த இருவரும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கில், ஐந்தாவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. போலீஸ் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில், யோகேஷ் குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனையும்,10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.
சம்பவம் நடந்து ஐந்து மாதங்களில், குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.