கர்நாடகா - கோவா வனப்பகுதி வழியாக மது கடத்தலை தடுக்க டிரோன் கண்காணிப்பு
கர்நாடகா - கோவா வனப்பகுதி வழியாக மது கடத்தலை தடுக்க டிரோன் கண்காணிப்பு
ADDED : ஜன 21, 2024 12:35 AM

உத்தர கன்னடா : கர்நாடகா - கோவா மாநில எல்லையில் உள்ள வனப்பகுதி வழியாக, மதுக் கடத்துவதை கட்டுப்படுத்த கலால் துறையினர், 'டிரோன்' மூலம் கண்காணித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா கார்வார் மற்றும் கோவா மாநில எல்லையில் வனப்பகுதி வழியாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக, கலால் துறை போலீசாருக்கு தகவல் வருகிறது.
இந்நிலையில், முடகேரி அணை அருகே உள்ள மாஜாலி வனப்பகுதியில் சட்டவிரோத மதுபானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முடகேரி அணை ஓரம் செல்லும் நடைபாதை, பீமகோலா அணை அருகே செல்லும் நடைபாதை, மைங்கினி உள்ளிட்டவை சட்டவிரோத மதுக்கடத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது.
எனவே, டிரோனை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள, கலால் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி கார்வார் மாஜாலி அருகே உள்ள வனப்பகுதியில் டிரோன் மூலம் கலால் துறை அதிகாரிகள் ஒத்தகை நடத்தினர்.
இது தொடர்பாக கலால் துறை ஆய்வாளர் பசவராஜா கூறியதாவது:
கோவாவில் இருந்து கடல், வனப்பாதைகள் வழியாக மாவட்டத்துக்கு சட்டவிரோதமாக மதுபானம் வினியோகம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் பற்றாக்குறையால், சில நேரங்களில் தேடுதல் வேட்டை தடைபட்டது.
டிரோன் விமானங்கள் மூலம் கடத்தல்காரர்கள் பாதையை கண்டுபிடிக்க முடியும் என்பதை இந்த ஒத்திகை மூலம் தெரிய வந்துள்ளது.
தனியார் இடமிருந்து வாடகை அடிப்படையில் டிரோன் கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
டிரோன் மூலம் வனப்பகுதியில் கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்ட கலால் துறை அதிகாரிகள். இடம்: கார்வார், உத்தர கன்னடா.

