ADDED : அக் 26, 2025 02:04 AM
சண்டிகர்: போதைக்கு அடிமையான தம்பதி விற்பனை செய்த ஆறு மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டு, கணவன் - மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் அக்பர்பூர் குடால் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி போதைப் பொருளுக்கு அடிமையாகினர். ஆறு மாதங்களுக்கு முன் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சமீபத்தில், போதைப் பொருள் வாங்க பணம் இல்லாமல் தவித்த தம்பதி, தங்கள் ஆண் குழந்தையை புத்லாடா நகரில் வசிக்கும் ஒருவருக்கு 1.80 லட்சம் ரூபாய்க்கு விற்றனர். அந்தப் பணத்தில் போதைப் பொருள் வாங்கி கணவன் - மனைவி இருவரும் ஜாலியாக பொழுதைக் கழித்தனர்.
இந்நிலையில், கணவனின் சகோதரி குழந்தை குறித்து விசாரித்தார். இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் நடத்திய விசாரணையில் பழைய இரும்பு வியாபாரியிடம் குழந்தையை விற்றதை ஒப்புக் கொண்டனர். குழந்தையை மீட்ட போலீசார் தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குழந்தையை வாங்கிய வியாபாரிக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அதனால் ஆண் குழந்தையை போதை தம்பதியிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். திருமணத்துக்குப் பின் கணவனுடன் சேர்ந்து போதைப் பழக்கத்து அடிமையான குழந்தையின் தாய், மல்யுத்த வீராங்கனை என போலீசார் கூறினர்.
மீட்கப்பட்ட குழந்தையை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க, மான்சா மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கு, கடிதம் அனுப்பியுள்ள பஞ்சாப் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் கன்வர்தீப் சிங், குழந்தையை விற்ற தம்பதி மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து வரும் 31ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

