ADDED : ஆக 20, 2025 10:27 PM

பாலக்காடு; பாலக்காடு மாவட்டத்தில், போதை மாத்திரை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாலக்காடு வாளையாரில் இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையிலான போலீசார், வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த 'கேஎல்9 எஎஸ் 3945' என்ற பதிவு எண்ணுள்ள காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில், 32 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள 7.84 கிராம் மெத்தாபெட்டாமின் என்ற போதை மாத்திரை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, காரில் இருந்த பாலக்காடு மேப்பரம்பு பகுதியைச் சேர்ந்த ரமீஸ், 29, பிராயிரி பகுதியைச் சேர்ந்த பஸ்சாம், 29, ஆகியோரை கைது செய்தனர்.
அதேபோல், சித்தூர் எஸ்.ஐ., ரமேஷ் தலைமையிலான போலீசார், ஐந்தாம்மைல் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகிக்கும் வகையில் இருந்த நபரிடம் நடத்திய சோதனையில், 12 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள, 3.16 கிராம் மெத்தாபெட்டாமின் போதை மாத்திரை வைத்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் பாலக்காடு குன்னத்தூர்மேடு பகுதியைச் சேர்ந்த சனூப், 29, என்பது தெரியவந்தது.