ADDED : நவ 13, 2024 12:25 AM

பெங்களூரு, ; “பெங்களூரில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக வெளிநாட்டினர் உட்பட 64 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்,” என, போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறினார்.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, நேற்று தனது அலுவலகத்தில் அளித்த பேட்டி:
பெங்களூரு நகரில் கடந்த அக்டோபர் மாதம், மட்கா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று வழக்குகளில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். சூதாட்டத்தில் 30 வழக்குகளில் 176 பேர்; ஆன்லைன் சூதாட்டத்தில் மூன்று வழக்குகளில் எட்டு பேர்;
மது விற்றதாக ஏழு வழக்குகளில் ஏழு பேர்; ஆள்கடத்தலில் 17 வழக்குகளில் 19 பேர்; ஆயுத தடை சட்டத்தில் ஐந்து வழக்குகளில் ஐந்து பேர்; வெடிக்கும் பொருட்கள் வைத்திருந்த வழக்கில் 85 வழக்குகளில் 76 பேர்.
பதிப்புரிமை சட்டத்தில் ஒன்பது வழக்குகளில் ஒன்பது பேர்; போதை பொருள் விற்றதாக 42 வழக்குகளில் பத்து வெளிநாட்டவர் உட்பட 64 பேர்; மாணவர்களுக்கு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விற்றதாக 32 வழக்குகளில் 32 பேர் என, மொத்தம் 237 வழக்குகளில் 401 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கொள்ளை
ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், சம்பிகே தியேட்டர் உரிமையாளர் நாகேஷை கட்டிப் போட்டு, அவரது வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் நேபாள தம்பதி ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
கொள்ளை அடித்த நகை, பணத்தை வர்த்துாரில் வசிக்கும் உறவினர் வீட்டில் மறைத்து வைத்திருந்தனர். அந்த வீட்டில் இருந்து 1.60 கிலோ தங்க நகைகள், 450 கிராம் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.
இவற்றின் மதிப்பு 1.12 கோடி ரூபாய். இந்த வழக்கில் நேபாளத்தின் பிரகாஷ்சாய், 46, அபீல்சாய், 41, ஜெகதீஷ்சாய், 39, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோனனகுண்டே கிராசில் வசிப்பவர் நாகேஷ். இனிப்பு பொருட்கள் உற்பத்தி செய்யும் கடை நடத்துகிறார்.
கடந்த மாதம் 10ம் தேதி இரவு, நாகேஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தவர்கள், வீட்டில் இருந்த 182 கிராம் தங்கநகைகள், 200 கிராம் வெள்ளி பொருட்கள், 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.
இந்த வழக்கில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா மொதகானபள்ளி கிராமத்தின் நாகராஜ், 68, கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 208 கிராம் நகைகள், 1 கிலோ 100 கிராம் வெள்ளி, 2.50 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன. மொத்த மதிப்பு 25 லட்சம் ரூபாய்.
இவர் மீது ஏற்கனவே மஹாலட்சுமி லே - அவுட், மடிவாளா, ஜே.பி., நகர், ஹலசூரு போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், ஆந்திராவின் குப்பம், பலமநேருவில் தலா 12 திருட்டு வழக்குகளும் உள்ளன.
ஆந்திர பெண்
இதுபோல சுப்பிரமணியபுரா போலீசார், நகை கடையில் திருடிய வழக்கில் சுங்கதகட்டேயின் லிகித், 25, என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 126 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
கோனனகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அஞ்சனாத்ரி லே - அவுட்டில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாவனா பனீந்திரா. இவரது வீட்டில் தசரா பண்டிகையையொட்டி, சாமி படங்களுக்கு தங்க நகை அணிவித்து அலங்கரித்தனர்.
மீண்டும் சரிபார்த்தபோது, 18 கிராம் நகைகள் மாயமாகி இருந்தன. வீட்டில் வேலை செய்த ஆந்திராவின் கடபா புலிவெந்துலாவின் சோனியா, 25, மீது புகார் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். நகைகள் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 108 கிராம் நகைகள் மீட்கப்பட்டன.
ஐ போன்கள்
மல்லேஸ்வரத்தில் வசிக்கும் லட்சுமி தீட்சீத், 87, என்பவர் வீட்டிற்குள், கடந்த மாதம் 31ம் தேதி அத்துமீறி புகுந்த நபர்கள் 2,000 ரூபாய் ரொக்கம், 40 கிராம் நகைகளை திருடிச் சென்றனர்.
இந்த வழக்கில் ஸ்ரீராமபுரம் ஜித்தன்குமார், 31, ஸ்ரீநகர் பஞ்சாக்சரி சாமி, 28 ஆகியோர் கைதாகினர். இவர்களிடம் இருந்து 4.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 57 கிராம் நகைகள், ஒரு பைக் மீட்கப்பட்டன.
பகலனகுண்டேயில் வசிப்பவர் சாம்சன் ஸ்டீபன், 30. கடந்த மாதம் 27ம் தேதி செட்டிஹள்ளியில் உள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு, பைக்கில் வீட்டிற்கு வந்தார். பைக்கை மறித்த மர்மநபர்கள், சாம்சனிடம் இருந்து 50,000 ரூபாய் மதிப்புள்ள தங்கச்செயின், 5,500 ரூபாய் ரொக்கம், ஒரு ஐ போனை வழிப்பறி செய்தனர்.
இந்த வழக்கில் ஆர்.டி.நகரின் அபிஷேக், 32, ஜே.சி.நகரின் கயாஸ் பாஷா, 26, ஹெப்பாலின் பரத்குமார், 28, ஸ்ரேயஷ், 26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, இரண்டு பைக், 11 கிராம் தங்கச்செயின், மூன்று ஐ போன்கள் மீட்கப்பட்டன.
மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு, தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.