ADDED : டிச 18, 2024 08:45 PM
புதுடில்லி:டில்லி மாநகரப் போலீசின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை அதிரடி சோதனையை துவக்கியுள்ளது.
தலைநகர் டில்லியில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து, குற்றச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
துப்பாக்கிச் சூடு, வழிப்பறி, கொலை மற்றும் கொள்ளை ஆகிய குற்றங்கள் நாள் தவறாமல் நடக்கின்றன என ஆம் ஆத்மி கட்சி, மத்திய உள்துறை அமைச்சகம் மீது கடும் குற்றச்சாட்டை கூறியுள்ளது.
இந்நிலையில், டில்லி மாநகரப் போலீசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து அதிரடி சோதனையை நேற்று துவக்கியது.
அதேநேரத்தில், போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என குற்றப் பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பீஷம் சிங் கூறினார்.
நியூ பிரண்ட்ஸ் காலனி மற்றும் டில்லி பல்கலையின் வடக்கு வளாகமான விஸ்வ வித்யாலயா பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
போதைப்பொருள் பயன்படுத்துவதால், ஏற்படும் உடல்நல பாதிப்பு, சட்டரீதியான நடவடிக்கை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேநேரத்தில், மோப்ப நாய் உதவியுடன் அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டன.
